வாஷிங்டன்: ‘சொந்த நாட்டை பற்றி தவறாக பேசும் ராகுல் காந்திக்கு, பிரதமராகும் புத்திசாலித்தனம் இல்லை’’ என்று பிரபல அமெரிக்க பாடகியும் நடிகையுமான மேரி மில்பென் கூறியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில், ‘‘அமெரிக்க அதிபர் ட்ரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார்’’ என்று விமர்சித்தார்.
இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ பாடகியும் நடிகையுமான மேரி மில்பென் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ராகுல் காந்தி நீங்கள் சொல்வது தவறு. அதிபர் ட்ரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படவில்லை. அவர் நீண்ட விளையாட்டை புரிந்து வைத்துள்ளார். அமெரிக்காவுடனான அவரது ராஜதந்திரம் ஒரு வியூகம். ட்ரம்ப் அமெரிக்காவுக்கு தான் முதல் முன்னுரிமை கொடுப்பார்.
அதேபோல் தனது நாட்டுக்கு எது நல்லதோ அதைத்தான் பிரதமர் மோடியும் செய்வார். அதை நான் வரவேற்கிறேன். இதை ராகுல் காந்தி புரிந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், அவருக்கு பிரதமராகும் புத்திசாலித்தனம் இல்லை.
வெளிநாடுகளுக்கு செல்லும் போது சொந்த நாட்டை பற்றியும், சொந்த மக்களைப் பற்றியும் தவறாக பேசுபவரை மக்கள் ஏற்கமாட்டார்கள். எனவே, ‘நான் இந்தியாவை வெறுக்கிறேன்’ என்ற சுற்றுப்பயணத்தில் இருந்து ராகுல் திரும்பிவிடுவது நல்லது.
இவ்வாறு பிரபல பாடகி மேரி மில்பென் கூறியுள்ளார். மேரி மில்பென் அமெரிக்காவில் கடந்த 2023-ம் ஆண்டு பிரதமர் மோடியை முதல் முறையாக சந்தித்தார்.