‘பிரதமர் மோடி மவுன சாமியார் ஆகிவிடுகிறார்’- ரஷ்ய எண்ணெய் குறித்த ட்ரம்ப் கருத்துக்கு காங். எதிர்வினை

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், அது குறித்து பிரதமர் மோடி பேசாதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்காக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரியை விதித்துள்ளது. அதேநேரத்தில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை படிப்படியாக நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தும் என எனது நண்பர் மோடி என்னிடம் உறுதி அளித்துள்ளார் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி இருக்கிறார். ஆனால், அந்த நல்ல நண்பர் திடீரென மவுன சாமியார் ஆகிவிடுகிறார். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை நான்தான் நிறுத்தினேன் என ட்ரம்ப் கூறும்போதும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைக்கும் என மோடி கூறியுள்ளார் என ட்ரம்ப் கூறும்போதும் அவர் மவுன சாமியாராகிவிடுகிறார்.

இதற்கிடையில், 2025 ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் சீனா உடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சீனா உடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்கறை 49.6 பில்லியன் டாலராக இருந்தது. அது தற்போது 54.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ட்ரம்ப்பின் கருத்து தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “எண்ணெய் மற்றம் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலையற்றதாக உள்ள நிலையில், இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்களின் தொடர்ச்சியான முன்னுரிமையாக இருந்து வருகிறது. இந்த அடிப்படையில்தான் எங்களின் இறக்குமதி கொள்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.

நிலையான எண்ணெய் விலை, பாதுகாப்பான விநியோகம் ஆகியவையே இந்தியாவின் எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகளாகும். இந்தியாவின் எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துவதும், சந்தை நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்ப பல்வகைப்படுத்துவதும் இதில் அடங்கும்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அந்நாட்டிடம் இருந்து எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த பல ஆண்டுகளாக நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக இதில் சீரான முன்னேற்றம் இருந்து வருகிறது. தற்போதைய நிர்வாகம், இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டி இருக்கிறது. இது தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகின்றன” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.