தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: தனியார் பல்கலைக் கழக சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு தனியார் பல்கலைக் கழகச் சட்டம் 2019- ல், தனியார் பல்கலைக் கழகம் அமைக்க தொடர்ச்சியாக குறைந்தபட்சம் 100 ஏக்கர் பரப்பளவு நிலம் தேவை என்ற சட்டப் பிரிவை திருத்தம் செய்யும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் விளைவாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து, குறிப்பாக மாணவர் சேர்க்கை முறை, கல்விக் கட்டணம், துணைவேந்தர், இணை வேந்தர் நியமன முறை, ஆட்சி மன்றக் குழு போன்ற எல்லாவற்றிலும் அரசு விலகிக் கொள்ள, அல்லது விலக்கி வைக்க இந்தச் சட்டம் வழி வகுத்து விடும் என்பதை பேரவையில் அரசின் கவனத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்த மசோதா வழியாக தமிழ்நாடு அரசின் சமூக நீதி கொள்கையும், இட ஒதுக்கீட்டு நடைமுறைகளும் கைவிடப்படும். தனியார் பல்கலைக் கழகங்கள் புற்றீசல்கள் போல் தோன்றும் பேரபாயம் உருவாகும்.

இது குறித்து உயர் கல்வித்துறை நிபுணர்கள், மூத்த பேராசிரியர்கள், மாணவர் அமைப்புகள் என பல தரப்பினரும் கூறியுள்ள கருத்துகளை அரசு பரிசீலித்து, தனியார் பல்கலைக் கழக சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.