காபூல்: ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி பாக்டிகா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் உர்குன் மற்றும் பார்மல் மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் மாலையில் வான்வழி தாக்குதல் நடத்தியது. மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏசிபி வெளியிட்ட அறிக்கையில், “நட்பு ரீதியிலான ஒரு ஆட்டத்தில் பங்கேற்க எங்கள் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள உர்குனில் இருந்து ஷரானாவுக்கு சென்றனர். அவர்கள் மீண்டும் உர்குன் திரும்பிய பிறகு அவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். இதில் கபீர், சிப்கதுல்லா, ஹாரூன் ஆகிய 3 வீரர்கள் உட்பட 8 பேர் உயிரி ழந்தனர். பாகிஸ்தானின் இந்த தாக்குதல் கோழைத்தனமானது.
உர்குன் மாவட்ட கிரிக்கெட் வீரர்களின் உயிர் தியாகத்திற்கு ஏசிபி ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறது” என்று கூறியுள்ளது.
போட்டியில் இருந்து விலகல்: தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் அடுத்த மாதம் நடைபெறவிருந்த முத்தரப்பு டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் விலகியது. இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஏசிபி இம்முடிவை எடுத்துள்ளது.
ஏசிபியின் இந்த முடிவை ஆப்கானிஸ்தான் டி-20 அணியின் கேப்டன் ரஷீத் கான் வரவேற்றுள்ளார். பாகிஸ்தான் தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அடைக்கலமும் பயிற்சியும் தரப்படுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக ஆப்கனில் கடந்த 9-ம் தேதி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து எல்லையில் இரு நாட்டுப் படைகளும் ஒரு வாரம் மோதலில் ஈடுபட்டன. இதில் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து இரு நாட்டுப் படைகளும் எல்லையில் 48 மணி நேர சண்டை நிறுத்தம் மேற்கொள்ள கடந்த புதன்கிழமை மாலை முடிவு செய்தன. இந்நிலையில் இந்த உடன்பாட்டை மீறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.