வாஷிங்டன்: ‘கிங் ட்ரம்ப் ஜெட்’ எனப் போராட்டக்காரர்களை கலாய்த்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட ஏஐ வீடியோ சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றதில் இருந்தே அரசியல், பொருளாதார ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவை மீண்டும் வலிமையானதாக ஆக்குவேன் ‘மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்’ என்ற கொள்கையின்படி செயல்படுவதாகச் சொல்லும் ட்ரம்ப்பின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் உலக நாடுகளை மட்டுமல்ல உள் நாட்டு மக்களையும் வெகுவாகவே பாதித்துள்ளது.
மருத்துவக் காப்பீட்டுப் பலன்களைக் குறைத்தது, அரசு ஊழியர்களை வெகு எளிதாக வேலைநீக்கம் செய்யும்படி சட்டத்திட்டங்களை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வளைத்தது எனக் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் மக்கள் பிரம்மாண்டப் பேரணியில் ஈடுபட்டனர். ‘இங்கு யாரும் மன்னர் இல்லை’ என்று கோஷங்களை மக்கள் எழுப்பினர். லட்சக்கணக்கானோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில், அமெரிக்க மூத்த எம்பி பெர்னி சாண்டர்ஸ், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் உட்பட ஜனநாயகக் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ட்ரம்ப் முதலில் இந்தப் போராட்டங்கள் குறித்து கூறுகையில், “இந்தப் போராட்டங்கள் அர்த்தமற்றது. அவர்கள் என்னை ஒரு மன்னர் எனக் குறிப்பிடுகிறார்கள். நான் மன்னர் இல்லை. அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். அமெரிக்க நலன்களை உறுதி செய்யவே இந்த நடவடிக்கைகளை எடுக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.
‘கிங் ட்ரம்ப்’ – ஆனால் சில மணி நேரங்களுக்குப் பின்னர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூகவலைதளம் மற்றும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில் ஒரு ஏஐ வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘கிங் ட்ரம்ப்’ என்று எழுதப்பட்ட ஒரு ஜெட் போர் விமானத்தில் தலையில் கிரீடத்துடன் செல்லும் ட்ரம்ப் போராட்டக்காரர்கள் மீது பழுப்பு நிற திரவத்தை ஊற்றுகிறார். இந்த ஏஐ வீடியோவை குடியரசுக் கட்சியினர் பகிர்ந்து வருகின்றனர்.
அதேவேளையில் ஜனநாயகக் கட்சியினரும், பொதுமக்களின் ட்ரம்ப்பின் இந்த வீடியோவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஜனநாயக முறையில் போராடும் மக்களை நாட்டின் அதிபரே இவ்வாறாக கிண்டல் செயது என்ன மாதிரியான மனநிலை என்று விமர்சிக்கின்றனர்.