குன்னூர்: சாலையில் வழிந்தோடும் காளான் கழிவுநீர்; நோய்த்தொற்று அபாயத்தில் கூலி தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கோலணி மட்டம் பகுதி.

நூற்றுக்கணக்கான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் முறையான சாலை, நடைபாதை, பொதுக்கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

சாலையில் வழிந்தோடும் காளான் கழிவுநீர்
சாலையில் வழிந்தோடும் காளான் கழிவுநீர்

மேலும், இந்தப் பகுதிகளில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளுக்கு அளவிற்கு அதிகமான ரசாயனங்களைப் பயன்படுத்தப்படுவதால், சுவாசப் பிரச்னைகள், சரும பாதிப்புகள், தைராய்டு சுரப்பி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், அறுவடை செய்து முடிக்கப்பட்ட காளான் கழிவுகளை பெருநில உரிமையாளர்கள் சிலர் இந்த மக்கள் வாழும் குடியிருப்புகள் அருகில் மாதக்கணக்கில் குவித்து வைப்பதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், காளான் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி நோய்த்தொற்று அபாயத்தில் ஒவ்வொரு நாளும் தவிப்பதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய உள்ளூர் மக்கள், “முறையற்ற வேளாண்மையால் தொடர்ந்து மண் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் பல அடிக்கு சேறும் சகதியுமாகக் காணப்படுகின்றன. பள்ளி குழந்தைகள், நோயாளிகள், வயதானோர் இந்தச் சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் தடுமாறி வருகிறோம். போதாக்குறைக்கு காளான் கழிவுகளை டன் கணக்கில் கொண்டு வந்து குடியிருப்பு அருகில் குவித்து வைத்திருக்கின்றனர்.

சாலையில் வழிந்தோடும் காளான் கழிவுநீர்
சாலையில் வழிந்தோடும் காளான் கழிவுநீர்

தாங்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதால் வாந்தி, குமட்டல் ஏற்பட்டு வருகின்றன. கருமையான நிறத்தில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால் நோய் பரவும் அபாயமும் இருக்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருவாய்த்துறையினரிடம் பலமுறை வலியுறுத்தியும் ஒரு பயனும் இல்லை. பெருநில உரிமையாளர்களுக்கு ஆதரவாகவும் மக்களுக்கு எதிராகவும் செயல்படுவதையே வேலையாகச் செய்து வருகின்றனர்” என்றனர்.

வருவாய்த்துறை அலுவலர் மஞ்சுவை தொடர்புகொண்டு பேசினோம், “இது குறித்து எங்களின் கவனத்திற்கு வரவில்லை. களத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.