தெஹ்ரான்,
ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அந்நாட்டின் தெஹ்ரான் நகரில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கடந்த 2022-ம் ஆண்டு போலீசார் நடத்திய தாக்குதலில் மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண் கோமா நிலைக்கு சென்றார். இதன்பின்னர் சிகிச்சை பலனின்றி அந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி உயிரிழந்து உள்ளார்.
இது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரான் முழுவதும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கினர். இதனால், ஈரானில் அமைதியற்ற நிலைமை காணப்பட்டது. அமினிக்கு ஆதரவான போராட்டத்தின்போது, இளம்பெண்களான நிகா ஷாகராமி, ஹதீஸ் நஜாபி, மஹ்சா ஆமினி மற்றும் சரீனா இஸ்மாயில்ஜடே ஆகியோரும் உயிரிழந்தனர்.
போராட்டத்தில் குதித்த பெண்கள் தங்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்தும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும், தங்கள் தலைமுடியை வெட்டியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தெருக்களில் இறங்கி போராடிய நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் கைது செய்யப்பட்டனர். 2 மாதங்களுக்கு மேலாக பெண்கள் நடத்திய போராட்டம், அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஒடுக்க ஈரான் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பெண்களின் முகம், மார்பகம், அந்தரங்க உறுப்புகள் ஆகியவற்றை குறி வைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். ஹிஜாப் அணியாத பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் மனநல சிகிச்சை மையம் அமைக்க போகிறோம் என்றும் ஈரான் அரசு கூறியது. இதுபோன்று மக்களுக்கு எதிராக கடுமையாக நடந்து கொண்டது.
ஆனால், தற்போது வெளியான வீடியோ ஒன்று அந்நாட்டின் உண்மை நிலையை வெளிப்படுத்தி உள்ளது. இதனால், ஈரானின் உச்ச தலைவர் அயோதுல்லா அலி காமேனிக்கு புதிதாக சிக்கல் உருவாகி உள்ளது. அவருடைய நம்பிக்கைக்குரியவரான, ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி மற்றும் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை வழிநடத்தி சென்றவரான அலி ஷாம்கனியின் மகளின் திருமணம் 2024-ம் ஆண்டு நடந்தது.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், கனியின் மகள், தெஹ்ரான் நகரில் உள்ள உயர்தர ஆடம்பர எஸ்பினாஸ் பேலஸ் என்ற ஓட்டலின் திருமண அரங்கிற்குள் அழைத்து வரப்படுகிறார். கனியும், கனியின் மகளான பாத்திமாவும் மெதுவாக அறைக்குள் நடந்து வருகின்றனர். அப்போது, முகம் நன்றாக தெரியும்படியும், கைப்பகுதி மறைக்கப்படாத வெண்மை நிற கவுன் அணிந்து கொண்டும், உடலின் முக்கிய பாகங்களை அரைகுறையாக மூடியபடி பாத்திமா நடந்து வருகிறார்.
இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், கனியின் மனைவியும் நீல நிற கவுனை அணிந்தபடி, முதுகு பகுதி மற்றும் பிற பகுதிகள் தெரியும் வகையிலான ஆடையை அணிந்து மணமகளுடன் நடந்து செல்கிறார். அவரும் ஹிஜாப் எதுவும் அணியவில்லை. அந்த வீடியோவில் காணப்படும் வேறு சில பெண்களும் கூட ஹிஜாப் அணியாமல் உலா வருகின்றனர்.
ஒரு மேற்கத்திய பாணியிலான திருமணம், மணமகள் மற்றும் அவருடைய தாயார் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் ஆடையணிந்து கொண்டு, என இந்த இரண்டும் ஈரான் நாட்டுக்கு ஒவ்வாத மற்றும் அந்நாட்டில் பார்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இது காமேனியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது என விமர்சகர்கள் தெரிவித்தனர்.
பல தசாப்தங்களாக ஹிஜாப் கட்டாயம் என்றும் அதற்காக கடுமையான சட்டங்களும் நடைமுறையில் உள்ளன. கனியின் மகள் இதுபோன்ற ஆடைகளை அணிகிறார். ஆனால், ஈரானிய பெண்கள் அவர்களுடைய தலைமுடியை காட்டியதற்காக கடுமையாக தாக்கப்படுவதும் காணப்படுகிறது என ஈரானில் இருந்து வெளியேறிய ஆர்வலர் மசி அலினிஜாத் உள்ளிட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஈரானின் ஷார்க் என்ற பத்திரிகை, அதன் முகப்பு பக்கத்தில் கனியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஊழலில் புதைக்கப்பட்டு விட்டது என தலைப்பும் வெளியிடப்பட்டது. தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிலும் போலியான நடிப்பின் தூய வடிவம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. புதிதாக திருமணம் செய்து கொண்ட இளம்பெண்கள் உள்பட பலர் கொன்று புதைக்கப்பட்டனர். ஆனால், அவர்களுடைய மருமகள் அரண்மனையில் இருக்கிறார் என ஈரான் பெண்கள் உரிமைக்கான ஆர்வலர் எல்லீ ஆமித்வாரி கூறுகிறார்.
ஆனால், கனியோ, 2024-ம் ஆண்டு ஏப்ரலில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை இஸ்ரேல் கசிய விட்டு உள்ளது. மக்களின் தனியுரிமையை ஹேக் செய்வது என்பது இஸ்ரேலின் புது வகையான படுகொலை என கூறியுள்ளார்.