புதுச்சேரி: கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் புதுச்சேரி முழுவதும் தொடர் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்கள், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்தது.
நகரின் முக்கிய வீதிகளான புஸ்சி வீதி, மிஷன் வீதி, காந்தி வீதி உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் தேங்கியது. இடையில் மழைவிட்ட சற்று நேரத்தில் தண்ணீர் வடிந்தது. திலாசுப்பேட்டையில் முதல்வர் ரங்கசாமி வீடு அமைந்துள்ள தெருவிலும் மழைநீர் தேங்கியது. மரப்பாலத்தில் இருந்து தேங்காய்திட்டு செல்லும் சாலை, இந்திரா காந்தி சிலை உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் தேங்கியது.
புதுச்சேரி – கடலூர் சாலையில் ரயில்வே மேம்பாலம் பணி நடைபெறுவதால் அந்தச் சாலை சேறும் சகதியுமாக காணப்பட்டது. நெல்லித்தோப்பு தொகுதிக்கு உட்பட்ட சக்தி நகரில் வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததால் அந்தப் பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் இது பற்றி தெரிவித்தார். உடனடியாக பொக்லைன் இயந்திரம் வரழைக்கப்பட்டு அடைப்புகள் சரி செய்யப்பட்டது.
கிராமப்புறங்களிலும் தொடர் மழையினால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. பெரும்பாலான இடங்களில் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாததால் தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பல நூறு ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தொடர் மழையினால் புதுச்சேரியில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் தண்ணீரின் அளவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி அரசு விடுமுறை என்பதால் பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சாலைகளில் போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. குறிப்பாக, காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை புதுச்சேரியில் 28 மி. மீட்டர் மழை பதிவாளியுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் நாளை (அக்.21) விடுமுறை அறிவித்துள்ளார். ஏற்கெனவே சனி, ஞாயிறு மற்றும் தீபாவளி விடுமுறை என 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்ட நிலையில், மழையின் காரணமாக 5-வது நாள் தொடர்ச்சியாக மழை விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.