சோனிபத்,
அரியானாவின் கன்னார் நகரில் இயங்கி வரும் தொழிற்சாலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் அறிவிக்கப்பட்டது. அதனை ஆவலாக வாங்க சென்ற தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. போனசாக அவர்களுக்கு சோன் பப்டி அடங்கிய சிறிய பாக்ஸ்கள் (பெட்டி) கொடுக்கப்பட்டு உள்ளன.
முதலில், அதில் என்ன உள்ளது என அவர்களுக்கு தெரியவில்லை. இதன்பின்னரே, அது சிறுவர் சிறுமிகள் விரும்பி சாப்பிடும் சோன் பப்டி என தெரிய வந்தது. இதனால், அவர்கள் கொதித்தெழுந்தனர். பொதுவாக தீபாவளி போனசாக பணம் கொடுக்கப்படும்.
ஆனால், அந்த நிறுவனம் சோன் பப்டி கொடுத்தது தொழிலாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே காலதாமத ஊதியம் மற்றும் விலைவாசி உயர்வால் தொழிலாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் நிறுவனம், இந்த இனிப்பு பெட்டிகளை வழங்கியது தங்களை அவமதிப்பதுபோல் உள்ளது என உணர்ந்தனர்.
இந்நிலையில், தொழிலாளர்கள் சோன் பப்டி பெட்டிகளை நிறுவனத்தின் வாசலின் முன் தூக்கி வீசி செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. எனினும், இதனால் ஆலைக்கு எந்தவித பாதிப்போ அல்லது வன்முறையோ பரவவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.