கீவ்,
ரஷியா – உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி அலாஸ்காவில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் போர்நிறுத்தம் தொடர்பாக எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதற்கிடையில் உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷிய ராணுவம் தொடர்ச்சியாக டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் உள்ள கார்கீவ் நகரில், மழலையர் பள்ளி ஒன்றின் மீது ரஷியா ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 7 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“கார்கிவ் நகரில் உள்ள ஒரு மழலையர் பள்ளி மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் துரதிர்ஷ்டவசமாக, ஒருவர் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தற்போது வரை, 7 பேர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கிருந்த அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலால் குழந்தைகள் பலர் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மழலையர் பள்ளி மீது தாக்குதல் நடத்தியதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ரஷியா வெட்கக்கேடான செயல்களை செய்து வருகிறது. அமைதியான தீர்வை வலியுறுத்தும் அனைவரின் முகத்திலும் உமிழ்வது போல் ரஷியா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. குண்டர்கள் மற்றும் பயங்கரவாதிகளை பலத்தால் மட்டுமே ஒடுக்க முடியும்.”
இவ்வாறு ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.