கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பைக் மீது பேருந்து மோதி தீப்பிடித்தது. இதில் 2 சிறுவர்கள் உட்பட 20 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்தை பேருந்தில் இருந்த 234 ஸ்மார்ட்போன்கள் மேலும் தீவிரப்படுத்தியிருக்கலாம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 23-ம் தேதி இரவு 10.30 மணிக்கு ‘வி-காவேரி’ எனும் தனியார் சொகுசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் கர்னூல் வழியாக பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் கர்னூல் மாவட்டம் 44-வது தேசிய நெடுஞ்சாலையில் சின்னடேக்கூரு என்ற இடத்தில் முன்னால் சென்ற பைக் மீது பேருந்து வேகமாக மோதியது. இதில், பைக்கை ஓட்டிச் சென்ற கர்னூல் பிரஜா நகரைச் சேர்ந்த சிவசங்கர் (24) என்பவர் தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தார். ஆனால், பேருந்தின் அடியில் பைக் சிக்கிக்கொண்டது.
ஓட்டுநர் இதை கவனிக்காமல் சுமார் 350 மீட்டர் வரை பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார்.இதனால், பைக்கின் பெட்ரோல் டேங்க் திடீரென வெடித்தது. பேருந்தின் டீசல் டேங்கில் தீப்பற்றி, மளமளவென பேருந்து முழுவதும் தீ பரவியது. இதில், பேருந்தில் இருந்த 2 சிறுவர்கள் உட்பட 20 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
கர்னூல் பேருந்து தீ விபத்தை பேருந்தில் இருந்த 234 ஸ்மார்ட்போன்கள் மேலும் தீவிரப்படுத்தியிருக்கலாம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த மங்கநாத் என்ற தொழிலதிபர் பார்சலாக அனுப்பிய ரூ.46 லட்சம் மதிப்புள்ள 234 ஸ்மார்ட்போன்கள் பேருந்து எடுத்துச்செல்லப்பட்டது. தீவிபத்து ஏற்பட்டபோது வெடித்த பேட்டரிகள் தீயின் தீவிரத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆன்லைன் ஷாப்பிங் செயலிக்காக இந்த ஸ்மார்ட்போன்கள் பார்சல் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிகிறது.
நிதியுதவி அறிவிப்பு: பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரு.50 ஆயிரமும் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலங்கானா மாநில முதல்வர்களும், அவரவர் மாநிலங்களை சேர்ந்தவர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதி உதவி அறிவித்துள்ளனர்.