நியூயார்க்,
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மத்திய கிழக்கின் நிலைமை குறித்த விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது:-
சமீபத்தில் கையெழுத்தான வரலாற்று சிறப்பு மிக்க காசா அமைதி ஒப்பந்தம் மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மையை நோக்கி பயணிக்க ஒரு மைல்கல் ஒப்பந்தம். இ்தனை இந்தியா வரவேற்கிறது. மத்திய கிழக்கில் அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும்.
இந்த ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்ததற்காக அமெரிக்காவுக்கு, குறிப்பாக ஜனாதிபதி டிரம்புக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த இலக்கை அடைவதில் எகிப்து மற்றும் கத்தாரின் பங்கையும் இந்தியா பாராட்டுகிறது. இரு நாடுகளின் தீர்வு மட்டுமே நடைமுறைக்கு ஏற்ற பாதை. அனைத்து தரப்பினரும் இந்த விஷயத்தில் தங்கள் கடமைகளை கடைப்பிடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினரின் எந்தவொரு ஒரு தலைப்பட்ச நடவடிக்கைகளையும் இந்தியா உறுதியாக எதிர்க்கிறது.
அமெரிக்காவின் வரலாற்று சிறப்புமிக்க முயற்சி அமைதியை நோக்கிய உத்வேகத்தை உருவாக்கியுள்ளது. 2023-ம் ஆண்டு அக்டோபரில் மோதல் தீவிரம் அடைந்ததில் இருந்து, பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா பயங்கரவாதத்தை கண்டித்தது. பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க கோரியது. மேலும் காசாவுக்கு தடையற்ற மனிதாபிமான உதவியின் அவசியத்தை வலியுறுத்தியது. கடந்த 2 ஆண்டுகளில் பாலஸ்தீனத்துக்கு இந்தியா ரூ1,491 கோடிக்கு மேல் நிவாரணம் வழங்கி உள்ளது. இதில் ரூ.351 கோடியில் 135 டன் மருந்துகள் மற்றும் நிவாரண பொருட்கள் அடங்கும்.
மனிதாபிமான உதவி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அது அனைத்து பொதுமக்களையும் சென்றடைய வேண்டும். ஏமனில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். சர்வதேச சமூகத்தின் ஆதரவு இல்லாமல் பாலஸ்தீன மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. சிரியா, லெபனான், ஏமன் உள்ளிட்ட பிராந்திய பிரச்சினைகளிலும் இந்தியா தொடர்ச்சியான மனிதாபிமான மற்றும் அமைதி காக்கும் பங்களிப்பை செய்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.