வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் பெண் அதிபர் நிச்சயம் இடம்பிடிப்பார் என தான் எதிர்பார்ப்பதாக ஜனநாயக கட்சியின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
அண்மையில் சர்வதேச ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் இது குறித்து பேசியுள்ளார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அப்போதைய அதிபர் ஜோ பைடன் பாதியில் விலகிய நிலையில் கமலா ஹாரிஸ் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்.
“நிச்சயம் எனது பேர பிள்ளைகள் வெள்ளை மாளிகையில் பெண் அதிபர் ஒருவர் பதவியில் இருப்பதை தங்கள் வாழ்நாளில் பார்ப்பார்கள் என நம்புகிறேன். அது நானாக கூட இருக்கலாம். அடுத்த அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அரசியலில் எனக்கு எதிர்காலம் உள்ளதாக நம்புகிறேன்.
நான் கருத்து கணிப்புகளை கருத்தில் கொள்வது இல்லை. அப்படி இருந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட்டு இருக்க மாட்டேன், இங்கு அமர்ந்து பேசி இருக்கவும் மாட்டேன். தன் மீதான விமர்சனங்களை அதிபர் ட்ரம்ப்பால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை” என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.