பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா இயற்கை எய்தினார். 74 வயதான இவர் கடந்த சில நாட்களாக சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார்.
தீவிர சிகிச்சையைத் தொடர்ந்து நேற்றைய தினம் இவரின் உடல்நிலை மோசமாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து சதீஷ் ஷாவின் இல்லத்திற்குச் சென்ற மருத்துவர்கள் அவருக்கு CPR சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். சதீஷ் ஷா, `சாராபாய் vs சாராபாய்’, ஜானே பி தோ யாரோ’ போன்ற பாலிவுட் திரைப்படங்களில் நடித்துப் பெயர் பெற்றவர்.
சதீஷ் ஷாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மூத்த நடிகர் சதீஷ் ஷாவின் மறைவு குறித்து நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளோம்.
நேற்று காலை, அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு அவசர அழைப்பு வந்தது. உடனடியாக மருத்துவக் குழுவுடன் ஆம்புலன்ஸ் அவரது இல்லத்திற்கு அனுப்பப்பட்டது, அங்கு அவர் மோசமான நிலையில் இருந்தார்.

ஆம்புலன்ஸிலேயே CPR சிகிச்சை கொடுக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்தவுடன் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டது. எங்கள் மருத்துவக் குழுவின் முழு முயற்சி செய்தும், சதீஷ் ஷாவைக் காப்பாற்ற முடியவில்லை.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சதீஷ் ஷாவின் உடல் அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அவருடைய மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.