புதுடெல்லி: நாடு தழுவிய அளவில் வாக்காளர் பட்டியலை திருத்தும் செயல்முறை குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நாளை வெளியிட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் மேற்கொண்டது. சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரிலான இந்த செயல்முறை மூலம் போலி வாக்காளர்கள், இரட்டை வாக்குரிமை கொண்டிருந்தவர்கள், மரணமடைந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து ஊடுருவியவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த செயல்முறையில் சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நடவடிக்கையின் மூலம் தேர்தல் ஆணையம் ஆளும் பாஜகவுக்கு துணை போவதாக அவை குற்றம் சாட்டின. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். எனினும், சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தடையோ, இடைக்கால தடையோ வழங்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடர்வதற்கு தடையில்லை என அறிவித்தது.
இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உள்பட தேர்தல் ஆணையர்கள் நாளை (அக். 27) மாலை செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாகவும், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நாடு தழுவிய அளவில் மேற்கொள்வது குறித்த அறிவிப்பை அவர்கள் வெளியிட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்கள் உட்பட 10 முதல் 15 மாநிலங்களில் முதல்கட்ட எஸ்ஐஆர் மேற்கொள்ளப்படலாம் என தெரிகிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, இந்த மாநிலங்களில் எஸ்ஐஆர் தற்போது தொடங்கப்படலாம் என தெரிகிறது.
கடந்த 24ம் தேதி வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர், தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம் விரைவில் மேற்கொள்ளப்பட இருப்பதாகக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.