மும்பை,
இந்திய அணியில் சில வருடங்களுக்கு முன்பு நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் அஜிங்கியா ரஹானே. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவ போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியவர். குறிப்பாக, டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடரை வல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர்.
ஆனால் சில வருடங்களாக ரஹானே அணியில் இடம் கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டுள்ளார். தனக்கு அணியில் இடம் வழங்காதது குறித்து தனது ஆதங்கத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வரும் ரஹானே, அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என தனது ஆதங்கத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது;
”என்னைப் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்திய அணி நிர்வாகத்தினர் என்னிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஆஸ்திரேலியாவில் பார்டர்-கவாஸ்கர் தொடரின்போது இந்திய அணிக்கு நான் தேவைப் பட்டேன். நானும் தயாராகத்தான் இருந்தேன். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் விளையாடும்போது அனுபவம் மிகவும் முக்கியம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.