ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி, அடுத்ததாக நவம்பர் 30ம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய மண்ணில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு, வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் இந்திய அணி உள்ள நிலையில், இந்த தொடருக்கான அணியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காயத்திலிருந்து குணமடைந்த வீரர்கள் அணிக்கு திரும்பும் அதே வேளையில், சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Add Zee News as a Preferred Source
மீண்டும் களத்தில் ரிஷப் பன்ட்
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நற்செய்தியாக, காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், இந்த தொடரின் மூலம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு, தனது உடற்தகுதியை முழுமையாக நிரூபித்துள்ள அவர், அணியில் கேஎல் ராகுலுக்கு அடுத்த விக்கெட் கீப்பராக இடம்பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனால், ஆஸ்திரேலிய தொடரில் மாற்று விக்கெட் கீப்பராக இருந்த துருவ் ஜுரெல் அணியிலிருந்து நீக்கப்படலாம்.

ஸ்ரேயாஸ் ஐயருக்கு பின்னடைவு!
இந்திய அணியின் புதிய துணை கேப்டனும், மிடில் ஆர்டரின் தூணுமான ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்பது பெரும் சந்தேகமாகியுள்ளது. அவர் குணமடைய குறைந்தது மூன்று வாரங்கள் ஆகலாம் என்பதால், அவருக்கு பதிலாக இளம் வீரர் திலக் வர்மா அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. பிசிசிஐ ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.
பும்ராவுக்கு ஓய்வு!
டி20 உலகக்கோப்பை நெருங்கி வருவதால், வீரர்களின் பணிச்சுமையை கையாள்வதில் அணி நிர்வாகம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தலைமை ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்த ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முக்கியமான டெஸ்ட் தொடரில் அவர் விளையாட உள்ளதால், ஒருநாள் போட்டிகளில் அவருக்கு ஓய்வளித்து, அடுத்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில், புத்துணர்ச்சியுடன் களமிறக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சுழற்பந்து வீச்சில் மாற்றம்?
ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறாத, சுழல் மன்னன் வருண் சக்கரவர்த்தி இந்திய ஆடுகளங்களை கருத்தில் கொண்டு, மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. அவ்வாறு அவர் அணிக்கு திரும்பினால், வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியிலிருந்து நீக்கப்படலாம். மேலும், காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பும் பட்சத்தில், அவருக்கு பதிலாக அணியில் இடம்பிடித்திருந்த நிதிஷ் குமார் ரெட்டி நீக்கப்படுவார்.
தென்னாப்பிரிக்கா தொடருக்கான உத்தேச இந்திய அணி
சுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, கே.எல். ராகுல், ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
About the Author
RK Spark