டோக்கியோ,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆசியாவில் உள்ள 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக ஜப்பான் நாட்டுக்கு அவர் சென்றார். அமெரிக்காவுடன் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்படும் வகையில் டிரம்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே டகாய்ச்சியை அந்நாட்டின் அகாசகா அரண்மனையில் டிரம்ப் நேரில் சந்தித்து உரையாடினார். அரண்மனையில் அவரை இன்முகத்துடன் டகாய்ச்சி வரவேற்றார். டிரம்புக்கு சிறப்பான ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. சமீபத்தில் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் ஆசியான் உச்சி மாநாடு நடந்தது. இதில் டிரம்ப் பங்கேற்றார். இதன்பின்னர் அவர் ஜப்பானின் டோக்கியோ நகருக்கு சென்றுள்ளார்.
பிரதமராக டகாய்ச்சி பதவியேற்ற பின்னர், அவர்களுக்கு இடையே நடந்த இந்த முதல் சந்திப்பானது முக்கியத்துவம் பெறுகிறது. இதனால், இருதரப்பு பேச்சுவார்த்தை நேர்மறையாக தொடங்கியது.
டிரம்புடனான சந்திப்பு பற்றி டகாய்ச்சி செய்தியாளர்களிடம் கூறும்போது, புதிய பொற்காலம் ஒன்றை உருவாக்கும் வகையில் டிரம்புடன் இணைந்து, ஜப்பான்-அமெரிக்க கூட்டணியை உருவாக்குவேன் என அப்போது உறுதி கூறினார். உலகிலேயே மிக சிறந்த கூட்டணியாக உருவாகியுள்ளது என்று இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவை அவர் சுட்டிக்காட்டி கூறினார்.
இதேபோன்று, மேற்காசியாவில் அமைதியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காக டிரம்புக்கு டகாய்ச்சி புகழாரம் சூட்டினார். காசா போரில் போர்நிறுத்த முடிவையும், தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கிடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வந்தது வரலாற்று சாதனையாகும் என்றும் டிரம்புக்கு அப்போது பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுப்பதற்கு அவருடைய பெயரை பரிந்துரைக்கும் நோக்கத்திலும் டகாய்ச்சி உள்ளார் என ஜப்பானின் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும் இதனை உறுதி செய்துள்ளது.
இந்த சந்திப்பின்போது, அரிய வகை தனிமங்கள் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர். சீனா சமீபத்தில் இதுபோன்ற அரிய வகை தனிமங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்தது. இது பல்வேறு வகையான பொருட்களின் உற்பத்திக்கு அடிப்படையானது. இந்த சூழலில், அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு உடனடியாக டகாய்ச்சி கையெழுத்திட்டு அதனை முடிவு செய்திருக்கிறார்.
இந்த பயணத்திற்கு பின்னர், டிரம்ப் தென்கொரியாவுக்கு பயணிக்க உள்ளார். இந்த பயணத்தின்போது சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச இருக்கிறார். சீனாவுடனான வர்த்தக போருக்கு இடையே இந்த பேச்சுவார்த்தை எதிர்பார்த்த பலனை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய தாதுப்பொருட்கள் மற்றும் அரிய வகை தனிமங்களை பாதுகாப்பது மற்றும் மீட்டெடுப்பது ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படும். அவற்றின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து முதலீடும் மேற்கொள்ளப்படும் என அதுபற்றிய அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.