அம்பாலா: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தில் நேற்று பறந்தார். இதன் மூலம் சுகோய் மற்றும் ரஃபேல் ஆகிய இரண்டு போர் விமானங்களிலும் பறந்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.
குடியரசுத் தலைவர் நாட்டின் முப்படை தளபதியாகவும் உள்ளார். தற்போதைய குடியரசுத் தலைவர் முர்மு கடந்த 2023-ம் ஆண்டில் சுகோய் போர் விமானத்தில் பறந்தார். இந்நிலையில் அவர் நேற்று இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்தில் பறக்க விருப்பம் தெரிவித்தார்.
அதன்படி ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்துக்கு அவர் நேற்று காலை சென்றார். அங்கு அவர் ரஃபேல் போர் விமானத்தில் சுமார் 30 நிமிடங்கள் பயணம் செய்தார். அந்த விமானத்தை குரூப் கேப்டன் அமித் கெஹானி ஓட்டினார். மணிக்கு 700 கி.மீ வேகத்தில் 15,000 அடி உயரத்தில் சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் அந்த விமானம் சென்றது. விமானப்படை தளபதி ஏ.பி.சிங், மற்றொரு ரபேல் போர் விமானத்தில் உடன் பறந்து சென்றார்.
இந்த அனுபவம் குறித்து அம்பாலா விமானப்படை மையத்தின் பார்வையாளர் புத்தகத்தில் திரவுபதி கூறுகையில், ‘‘ரஃபேல் போர் விமானமத்தில் பயணம் செய்தது எனக்கு மறக்கு முடியாத அனுபவம். சக்திவாய்ந்த ரஃபேல் விமானத்தில் இந்த முதல் பயணம், நாட்டின் பாதுகாப்பு திறன்கள் மீது புதிய பெருமை உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏற்பாடுகளை செய்த இந்திய விமானப்படைக்கும், அம்பாலா விமானப்படை தள குழுவினருக்கும் நன்றி’’ என தெரிவித்துள்ளார்.
சிவாங்கியுடன் சந்திப்பு: இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானத்தை இயக்கும் ஒரே பெண் விமானி விங் கமாண்டர் சிவாங்கி சிங். இவரை அம்பாலா விமானப்படை தளத்தில் குடியரசுத் தலைவர் முர்மு நேற்று சந்தித்தார். ரஃபேல் போர் விமானத்தில் திரவுபதி முர்முவை அமரச் செய்து சிவாங்கி சிங் விளக்கம் அளித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது இந்தியாவின் ரஃபேல் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, அதை இயக்கிய சிவாங்கி சிங்கை போர் கைதியாக பிடிபட்டார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதை போலி செய்தி என மத்திய அரசு தெரிவித்தது. தற்போது சிவாங்கி சிங், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் தோன்றியது, பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை அம்பலமாக்கியுள்ளது.