கெய்ரோ
சூடான் நாட்டில் துணை ராணுவ படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு டார்பர் பகுதியில் எல்-பாஷர் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் திடீரென தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், அவர்களுடைய உறவினர்கள் என மொத்தம் 460 பேர் வரை உயிரிழந்து உள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
இது பற்றிய தகவல்களால், ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்து இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். சூடானில் அரசுக்கும் மற்றும் துணை ராணுவத்திற்கும் இடையே ஓராண்டுக்கு மேலாக மோதல் போக்கு இருந்து வருகிறது. அவ்வப்போது, துணை ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் சம்பவங்களால் பொதுமக்கள் கொல்லப்படும் துயரம் நடந்து வருகிறது.