சான்பிரான்சிஸ்கோ: இதய சிகிச்சை நிபுணர்களின் உலகளாவிய மாநாடு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் டெல்லி பத்ரா மருத்துவமனை டீனும், இதய சிகிச்சை நிபுணருமான டாக்டர் உபேந்திர கவுல், டுக்ஸ்டோ-2 என்ற பெயரில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளை தாக்கல் செய்தார். இந்த பரிசோதனை டாக்டர் கவுல் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவராக பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் பால், திட்ட இயக்குனராக டாக்டர் பிரியதர்ஷினியும் பணியாற்றினர்.
இந்த பரிசோதனையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை இதய ஸ்டென்ட் ‘சுப்ராப்ளக்ஸ் க்ரஸ்’ மற்றும் சர்வதேச சந்தையில் கிடைக்கும் அமெரிக்க தயாரிப்பு ‘ஜீயன்ஸ்’ இதய ஸ்டெண்ட்டும் தீவிரமாக ஒப்பிடப்பட்டது. அப்போது டாக்டர் கவுல் கூறியதாவது:
இந்தியாவில் 66 இதய சிகிச்சை மையங்களில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. நீரிழிவு மற்றும் இதயத்துக்கு ரத்தம் செலுத்தும் 3 முக்கிய 
நாளங்களிலும் அடைப்பு உள்ளவர்களுக்கு இந்திய தயாரிப்பு ஸ்டென்ட் பொருத்தி பரிசோதிக்கப்பட்டது. இவர்களில் 80 சதவீதம் பேர், 3 முக்கிய ரத்த நாளங்களிலும் அடைப்பு உள்ளவர்கள். இந்த பரிசோதனை இந்திய தயாரிப்பு ‘சுப்ராபிளக்ஸ் க்ரஸ்’ ஸ்டென்ட், சர்வதேச தரத்திலான ஸ்டென்ட்டுக்கு எந்தவிதத்திலும் குறைவு இல்லை என்பதை நிரூபித்தது. குஜராத்தின் சூரத் நகரில் இந்த ஸ்டென்ட் தயாராகிறது. இவ்வாறு டாக்டர் கவுல் கூறினார்.
