தூள் கிளப்பும் மாருதி; பின்தொடரும் டாடா!

நவராத்திரி துவங்கி தீபத்திருநாளான தீபாவளிக்கு உட்பட்ட காலகட்டத்தில் மட்டும் கார் மற்றும் பைக்குகளின் விற்பனை இறக்கை கட்டியிருக்கிறது. உதாரணத்துக்கு டாடா மோட்டார்ஸை எடுத்துக் கொண்டால் இல்லை.. இல்லை… டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வெஹிக்கிள் நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், நவராத்திரிக்கும் தீபாவளிக்கும் இடைப்பட்ட காலத்தில் அது ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்திருக்கிறது. அதாவது வாடிக்கையாளர்களுக்கு அது டெலிவரியே கொடுத்திருக்கிறது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடும்போது, இது 33% அதிகம். இந்த அதீத வளர்ச்சிக்கு கிரியா ஊக்கியாகச் செயல்பட்டிருப்பது நெக்ஸான் மற்றும் பஞ்ச் மாடல்கள்தான். தவிர, மின்சாரக் கார்களும் இந்தச் சாதனைக்கு முக்கியப் பங்காற்றி இருக்கின்றன.

மாருதி சுஸூகி அதற்கும் மேலே சென்று, இந்தக் காலகட்டத்தில் நான்கரை லட்சம் முன்பதிவுகளைப் பெற்றிருக்கிறது. டெலிவரி என்று பார்த்தால், 3.25 லட்சம் கார்களை அது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரியே கொடுத்திருக்கிறது.

ஹூண்டாயும் இந்தப் பந்தயத்தில் கலந்து கொண்டு, இந்தக் காலகட்டத்தில் 14,000 கார்களைத் தன் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுத்திருக்கிறது.

இந்தப் போட்டியில் இருசக்கர வாகனங்களும் பின்தங்கவில்லை. அக்டோபர் 26-ம் தேதி கணக்குப்படியே மொத்தம் 18.5 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. ஜிஎஸ்டி வரிக்குறைப்பும் இதற்கு முக்கியப் பங்காற்றியிருக்கிறது.

மஹிந்திரா பொலேரோ, பொலேரோ நியோ, தார் என்று மஹிந்திரா பல ஃபேஸ்லிப்ட்டுகளைக் களம் இறக்கி, தீபாவளியை மேலும் குதூகலமாக மாற்றியது. டிவிஎஸ் தன் பங்கிற்கு அப்பாச்சி RTX-ஐ சிம்லாவில் வைத்து உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது.

கார், பைக் மற்றும் ஸ்கூட்டர் விற்பனைகள் பொங்கல் பண்டிகையைத் தாண்டியும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கும் என்பதால்… தங்கள் விற்பனையைத் தக்க வைத்துக்கொள்ள, இந்தக் காலகட்டத்தில் ஏராளமான புதிய அறிமுகங்கள் வர இருக்கின்றன.

– ஆசிரியர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.