ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பொற்காலம் தொடங்கியிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் உதயமானது. கடந்த 2005-ம் ஆண்டில் அந்த மாநில தலைநகர் ராய்ப்பூர் அருகே நயா ராய்ப்பூர் நகரம் உருவாக்கப்பட்டது. அங்கு 52 ஏக்கர் பரப்பளவில் ரூ.324 கோடி செலவில் பிரம்மாண்ட சட்டப்பேரவை கட்டப்பட்டு உள்ளது. புதிய சட்டப்பேரவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: கடந்த 2000-ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. இன்று சத்தீஸ்கர் உதயமான தினம். இப்போது வெள்ளி விழாவை கொண்டாடுகிறோம். 25 ஆண்டுகளில் மாநிலம் அபாரவளர்ச்சி அடைந்திருக்கிறது. தற்போது சத்தீஸ்கரில் பொற்காலம் தொடங்கியிருக்கிறது. முன்னாள் முதல்வர் ரமண் சிங் ஆட்சிக் காலத்தில் மாநிலம் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்தது. இன்றைய முதல்வர் விஷ்ணு தியோ சாய் ஆட்சியில் மாநிலம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மக்களே கடவுள் என்ற கொள்கையை பாஜக பின்பற்றுகிறது. பகவான் ராமர் சத்தீஸ்கரின் மருமகன் ஆவார். பகவானின் வழிகாட்டுதல்களின்படி சத்தீஸ்கரில் ராம ராஜ்ஜியம் நடைபெற்று வருகிறது.
சத்தீஸ்கரில் மவோயிஸ்ட் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநிலம் மட்டுமன்றி நாடு முழுவதும் மாவோயிஸ்ட், நக்சல் தீவிரவாதம் வேரறுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் இல்லாத இந்தியா உருவாகும். வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம். இந்த இலக்கை எட்ட சத்தீஸ்கர் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் ராய்ப்பூரில் நடந்த விழாவில் ரூ.14,260 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அங்கு நடந்த விழாவில் அவர் பேசியதாவது: சத்தீஸ்கரில் இயற்கை வளங்கள் நிறைந்திருக்கிறது. இதன்காரணமாக மாநிலத்தின் தொழில் துறை அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு வித்திட்டவர் முன்னாள் முதல்வர் ரமண் சிங். தற்போது அவர் சட்டப்பேரவையின் சபாநாயகராக உள்ளார். இந்த நேரத்தில் அவரை மனதார பாராட்டுகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
நயா ராய்ப்பூரில் 9.75 ஏக்கர் பரப்பளவில் ரூ.50 கோடி செலவில் பழங்குடி சுதந்திர போராட்ட வீரர்களின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. இது நாட்டின் முதல் டிஜிட்டல் பழங்குடியின அருங்காட்சியகம் ஆகும். இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் நயா ராய்ப்பூரில் 1.5 ஏக்கரில் பிரம்மாண்ட தியான கூடம் கட்டப்பட்டு உள்ளது. அந்த தியான கூடத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் நயா ராய்ப்பூரில் ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில் இதுவரை 37,000 குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. அங்கு அண்மையில் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 2,500 குழந்தைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.