‘உங்கள் மனைவியின் மதத்திலும் ஈடுபாடு காட்டுங்கள்’ – துணை அதிபருக்கு அமெரிக்க இந்து அமைப்பு வலியுறுத்தல்

வாஷிங்டன்,

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இந்திய வம்சாவளி பெண்ணான உஷாவை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுடன் ஜே.டி.வான்ஸ் கலந்துரையாடினார். அப்போது அமெரிக்க அரசின் குடியேற்ற கொள்கைகள் குறித்தும், ஜே.டி.வான்ஸ் குடும்பம் குறித்தும் பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவரிடம் நேரடியாக கேள்வி எழுப்பினார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்த மாணவி கூறுகையில், “உங்கள் மனைவி உஷா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் கிடையாது. உங்கள் வம்சாவளியினர் அமெரிக்காவிற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்தனர். அதே சமயம், உங்கள் மனைவியின் வம்சாவளியினர் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்திருப்பார்கள். உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் எவ்வாறு மதம் குறித்து சொல்லிக் கொடுக்கிறீர்கள்?

அமெரிக்காவில் அளவுக்கு அதிகமானோர் குடியேறிவிட்டதாக நீங்கள் கூறுகிறீர்கள். அந்த எண்ணிக்கையை எப்படி முடிவு செய்தீர்கள்? நாங்கள் எங்கள் இளமைக் காலத்தை இந்த நாட்டிற்காக அர்ப்பணித்தோம். நீங்கள் கேட்ட வரிகளை நாங்கள் செலுத்துகிறோம். உங்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்றால் கிறிஸ்தவராக இருக்க வேண்டும் என்று சொல்லப்போகிறீர்களா?” என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த ஜே.டி.வான்ஸ், “சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு சட்டங்களை இயற்றுகிறது. சில நூறு பேர் சட்ட ரீதியாக குடியேறி இருக்கிறார்கள் என்பதற்காக, பல மில்லியன் அளவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாம் தடுக்காமல் இருக்க முடியாது. இந்த நாட்டின் துணை ஜனாதிபதி என்ற முறையில் அமெரிக்க மக்களின் நலன்களில் கவனம் செலுத்துவதே எனது முதல் கடமை.

மேலும் எனது மனைவி உஷா கிறிஸ்தவர் கிடையாது. அவர் என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிக அற்புதமான ஆசீர்வாதம். பல ஆண்டுகளுக்கு முன்பு என் நம்பிக்கையில் மீண்டும் என்னை ஈடுபட ஊக்குவித்தவர் அவர்தான். நாங்கள் எங்கள் குழந்தைகளை கிறிஸ்தவர்களாகவே வளர்க்க முடிவு செய்துள்ளோம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் உஷா என்னுடம் தேவாலயத்திற்கு வருகிறார். நிச்சயம் அவர் ஒரு நாள் கிறிஸ்தவராக மாறுவார் என்று நான் நம்புகிறேன். ஒருவேளை அவர் மாறாவிட்டாலும், கடவுள் அனைவருக்கும் தனித்தன்மையை கொடுத்திருக்கிறார் என்பதால், அதை நான் ஒரு பிரச்சினையாக கருத மாட்டேன்” என்றார்.

இதனிடையே, ஜே.டி.வான்ஸ் பேச்சு குறித்து அமெரிக்க இந்து அமைப்புகள் விமர்சித்து வருகின்றன. இது குறித்து வெள்ளிக்கிழமை மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய ஜே.டி.வான்ஸ், “எனது மனைவி உஷா தற்போது மதம் மாறுவதற்கான திட்டத்தில் இல்லை. இருப்பினும் எனது நம்பிக்கையை ஒருநாள் அவர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன். எப்படி இருந்தாலும் அவர் எனது மனைவி, அவருக்கு என் அன்பும், ஆதரவும் எப்போதும் இருக்கும்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ஜே.டி.வான்ஸ் அவரது மனைவியின் மதமான இந்து மதத்தில் ஈடுபாடு காட்ட வேண்டும் என அமெரிக்க இந்து அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “துணை ஜனாதிபதியாகவும், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பொதுவான நபராகவும் இருக்கும் நீங்கள், இந்து மதம் இந்துக்கள் மீது ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தையும், இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

உங்கள் ஆதரவாளர்கள் சிலர், இந்த நாட்டின் அடிப்படை கருத்துக்களில் ஒன்றான மத சுதந்திரத்தை நம்பவில்லை. மத சுதந்திரம் என்பது இந்துக்களுக்கும் பொருந்தக் கூடியது என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் கிறிஸ்தவ மதத்தில் ஈடுபட வேண்டும் என உங்கள் மனைவி உங்கள் ஊக்குவித்தால், அதற்கு ஈடாக ஏன் இந்து மதத்திலும் நீங்கள் ஈடுபடக்கூடாது?” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.