திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் தாலுகாவுக்குஉட்பட்ட ஜவ்வாதுமலை கோவிலூர் பகுதியில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆதிசிவன் திருமூலநாதர் திருக்கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலின் கருவறை, ராஜகோபுரம் உள்ளிட்டவை சிதிலமடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பாக, தொல்லியல்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் கோயிலை புனரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், கருவறை பணிக்காக நேற்று பள்ளம் தோண்டியபோது, சிவலிங்கம் இருந்த இடத்துக்கு அடியில் பானை ஒன்று தென்பட்டன. இதையடுத்து, பானை உடையாமல் பக்குவமாக தோண்டியெடுத்து பார்த்தபோது, பளபளவென தங்கக் காசுகள் இருந்தன. மொத்தம், 103 தங்கக் காசுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புதையலை பார்த்து வியந்துபோன கட்டுமான பணியாளர்கள் `ஓம் நமசிவாய’ என்று பக்தி முழக்கமிட்டனர்.
இது குறித்து, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு விரைந்து சென்ற உதவி ஆணையர் சண்முக சுந்தரம் தலைமையிலான குழுவினர் தங்க நாணயங்களை கைப்பற்றி அந்தப் பகுதியில் மேலும் ஆய்வு செய்தனர். `அந்த காசுகள் எந்த காலத்தை சேர்ந்தது?’ என்று தொல்லியல்துறையினரும் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆய்வின் முடிவில், பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதோஷ நாளில், தங்கக் காசுகள் கிடைத்த நிகழ்வு, ஜவ்வாதுமலை கிராம மக்களிடையே காட்டுத் `தீ’போல பரவியதால், அப்பகுதி மக்கள் கோயிலுக்கு சென்று பக்தி பரவசத்துடன் திருமூலநாதருக்கு சிறப்புப் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். `வேறு ஏதேனும் தங்க புதையல் தென்படுகிறதா?’ என்கிற ஆசையில் வேறு சிலரும் கோயில் பகுதியை நோட்டமிட்டவாறு சுற்றி வருகின்றனர்.