துபாய்,
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூருக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு 11.40 மணிக்கு ஐ.எக்ஸ் 814 என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 170 பயணிகளுடன் மங்களூருக்கு புறப்பட தயாராக இருந்தது.
விமானம் ஓடு பாதையில் செல்லும் போது திடீரென்று தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து விமானி மீண்டும் விமான நிலையத்துக்கு திரும்புவதாக அறிவித்தார். இதனால் பல பயணிகள் அதிருப்தியடைந்தனர்.
மேலும், உடனடியாக மாற்று விமானம் ஏற்பாடு செய்ய முடியாது என அதிகாரிகள் கூறியதால் விமான நிலையத்தில் பயணிகள் தங்க வைக்கப்பட்டனர். பலருக்கு வேறு நாளில் செல்லவும், பணத்தை திரும்ப பெறவும் வாய்ப்பளிக்கப்பட்டது.
பின்னர், மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விமானத்தில் 110 பயணிகள் புறப்பட தயாராக இருந்தனர். மாற்று விமானம் நேற்று மாலை 5 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது.
இதனால் மீண்டும், மீண்டும் விமானம் ரத்து செய்யப்பட்டதால் மங்களூரு செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். குறிப்பாக பெண்கள், வயதானவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நேற்று இரவு வரை அந்த விமானம் புறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது