செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் வேகம் அசுரத்தனமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் அது மிகவும் பிரபலமானதாக மாறிவிட்டது. சாதாரண கணக்குகள், புதிர்களை தீர்ப்பதில் இருந்து பெருநிறுவனங்களை தொடங்கி நிர்வகிப்பது உள்ளிட்ட அனைத்துக்குமான யுக்திகளை தர வல்லதாக ஏ.ஐ. உருமாறிவிட்டது. இதனால் வணிகம் மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஏ.ஐ. வளர்ச்சியடைந்துவிட்டது.
செலவுகளைக் குறைத்தல், உற்பத்தித்திறனை அதிகரித்தல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல் மற்றும் வருமானத்தை அதிகரித்தல் போன்றவற்றை ஏ.ஐ.யே கவனித்து கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இந்தநிலையில் ஏ.ஐ.யை காரணம் காட்டி பெருநிறுவனங்கள் முதல் புத்தாக்க நிறுவனங்கள் வரை ஆட்குறைப்பில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த ஆண்டு இதுவரையில் உலகம் முழுவதும் ஏ.ஐ.யை காரணம் காட்டி 1 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து முன்னணி வணிக இணையத்தளமான ‘லே-ஆப்’ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகம் முழுவதும் உள்ள 218 நிறுவனங்கள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 732 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது ஊழியர்கள் 30 ஆயிரம் பேரை இதுவரை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.