சென்னை: எஸ்ஐஆர் படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வழங்காமல் பெட்டிக் கடைகளில் மொத்தமாக கொடுத்து விநியோகிப்பதை தடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார் மனு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமைச் செலகத்தில் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அவர் அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் நேர்மையாக இருந்தால்தான் தேர்தலும் நேர்மையாக நடக்கும். அந்த வாக்காளர் பட்டியலில் இறந்து போனவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், மாயாவிகள் இடம்பெறக் கூடாது என்பதற்காகத்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்படுகிறது. எஸ்ஐஆர் நல்ல நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்டது. எஸ்ஐஆர்-ஐ திமுகஒரு பக்கம் எதிர்த்துக் கொண்டு,மறுபுறம் அவர்களே குளறுபடிகளில் ஈடுபடுகின்றனர்.
எஸ்ஐஆர் படிவத்தை வாக்காளர்களுக்கு பிஎல்ஓ மூலமாககொடுக்க வேண்டும் என பலமுறை தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்திவிட்டோம். ஆனால் திமுக வட்டச் செயலாளர்கள், கவுன்சிலர் ஆகியோரிடம் மொத்தமாக கொடுத்து விடுகின்றனர். மதுரை வடக்கு தொகுதியில் பிஎல்ஓ ஒருவரிடம் மொத்தமாக கொடுத்து, பெட்டிக் கடைகள் மூலமாக விநியோகம் செய்துள்ளனர். அவர்களை கையும் களவுமாக பிடித்து தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்துள்ளோம். இதன் பின்னால் திமுக இருக்கிறது.
அந்த படிவத்தை கொடுக்கும் போது அந்த வீட்டில் வாக்காளர் இருக்க வேண்டும் என்பது விதி. திமுகவினர் குடிபெயர்ந்தவர்களை தொடர்பு கொண்டு அங்கேயே பதிவு செய்கின்றன. இது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது. மாவட்ட நிர்வாகங்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் பேசி இறந்தவர்களின் பட்டியலை வாங்கி அதை டிஎல்ஓக்களுக்கு கொடுக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சியில்பிஎல்ஓக்களாக ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுகவைச் சேர்ந்த பவானி பிஎல்ஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி இருந்தால் எப்படி நேர்மையாக பணி நடைபெறும். பிஎல்ஓக்கள் தமிழக அரசு அலுவலர்கள் என்பதால் ஆளுங்கட்சி கேட்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஆசிரியர்கள், வருவாய்த் துறை ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்.இவர்கள் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழி வகை உள்ளது. ஆனால் ஒப்பந்தபணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. மேற்கண்ட விவரங்களை தேர்தல் ஆணையத்தில் அளித்திருக்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.