சீதாமர்ஹி(பிஹார்): பிஹாரில் காட்டாட்சி வழங்கிய ஆர்ஜேடிக்கு முதற்கட்டத் தேர்தலில் மக்கள் 65 வோல்ட் மின் அதிர்ச்சியை அளித்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பகவான் ராமரின் மனைவி சீதாதேவியின் பிறந்த ஊராகக் கருதப்படும் சீதாமர்ஹி-யில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, முதல்கட்ட வாக்குப்பதிவில் பிஹார் அற்புதங்களை நிகழ்த்தியுள்ளது. இதில், பிஹாரில் காட்டாட்சி வழங்கியவர்களுக்கு 65 வோல்ட் மின் அதிர்ச்சியை (65% வாக்குப்பதிவு நடைபெற்றதை குறிப்பிடுகிறார்) மக்கள் வழங்கி இருக்கிறார்கள்.
பிஹார் இளைஞர்கள் வளர்ச்சியை தேர்ந்தெடுத்துள்ளார்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என பரவலாகப் பேசப்படுகிறது. பிஹாரின் சகோதரிகளும் மகள்களும் தேசிய ஜனாயகக் கூட்டணிக்கு சாதனை வெற்றியை உறுதி செய்துள்ளனர். துப்பாக்கி ஏந்திய அரசாங்கத்தை நாங்கள் விரும்பவில்லை என்ற செய்தியை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
அன்னை சீதாவின் புனித பூமிக்கு நான் வந்ததை பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். 5-6 ஆண்டுகளுக்கு முன்பு அன்னை சீதாவின் இந்த பூமிக்கு வந்தேன். அடுத்தநாள் உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி தீர்ப்பு அறிவிக்கப்பட இருந்தது. அன்னை சீதாவின் ஆசியுடன் தீர்ப்பு குழந்தை ராமருக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று நான் ரகசியமாக பிரார்த்தனை செய்தேன். அன்னை சீதா தேவியிடம் முன் வைக்கப்படும் பிரார்த்தனை எப்போதாவது தோல்வி அடையுமா? பிரார்த்தனை பலித்தது. உச்ச நீதிமன்றம் குழந்தை ராமருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
இன்று அன்னை சீதாவின் இந்த புனித பூமிக்கு உங்கள் ஆசிகளை வேண்டி வந்துள்ளேன். அன்னை சீதாவின் ஆசியுடன் மட்டுமே பிஹார் ஒரு வளர்ந்த மாநிலமாக மாற முடியும். இந்த தேர்தல், பிஹார் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். அதனால்தான் இந்த தேர்தல் மிகவும் முக்கியமாகிறது.
பிஹார் குழந்தைகளுக்கு ஆர்ஜேடி என்ன செய்ய விரும்புகிறது என்பதை அவர்களின் தலைவர்களின் பிரச்சாரங்களில் தெளிவாகத் தெரிகிறது. அவர்களின் பாடல்களையும் முழக்கங்களையும் கேளுங்கள். நீங்கள் திகிலடைவீர்கள்.
ஆர்ஜேடியின் சமூக ஊடக தளங்களில், தாங்கள் கெள்ளையர்களாக மாற விரும்புவதாக அப்பாவி குழந்தைகள் சொல்ல வைக்கப்படுகிறார்கள். பிஹாரைச் சேர்ந்த ஒரு குழந்தை கொள்ளையராக வேண்டுமா அல்லது நன்கு படித்து மருத்துவராக, வழக்கறிஞராக, பொறியாளராக வேண்டுமா?
பிஹாரில் குழந்தைகள் கொள்ளையர்களாக மாறமாட்டார்கள். அவர்கள் மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பொறியாளர்களாகவுமே மாறுவார்கள் என தெரிவித்தார்.