அமராவதி: தனது சொந்த தொகுதியான குப்பத்தில் ரூ.2,203 கோடியில் 7 தொழிற்சாலைகளுக்கு நேற்று அமராவதியில் இருந்தபடி காணொலி மூலம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்.
ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபடியே நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு காணொலி மூலம் சித்தூர் மாவட்டம், குப்பம் தொகுதியில் ஒரே சமயத்தில் 7 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, குப்பம் தொகுதி மக்கள், தொழிற்சாலை நிர்வாகிகளிடம் பேசியதாவது: ஆந்திரா-தமிழகம்-கர்நாடக மாநிலங்களின் எல்லையில் குப்பம் தொகுதி அமைந்துள்ளது. ஆதலால், இங்கு தொழிற்சாலைகள் அமைப்பதன் மூலம் 3 மாநிலங்களுக்கும் போக்குவரத்து மிக சுலபமாக மாறிவிடும். விரைவில் குப்பத்தில் விமான நிலையம் வர உள்ளது.
குப்பம் ரயில் நிலையமும் விஸ்தரிக்கப்பட்டு, நவீனமயமாக்கப்படும். இதன் மூலம் சாலை, ரயில், விமானங்கள் மூலம் இங்கு தயாரிக்கப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்ய வசதி வாய்ப்புகள் உண்டாகும்.
24 ஆயிரம் பேருக்கு வேலை: விரைவில் குப்பம் தொகுதியில் ரூ.6,300 கோடியில் மேலும் 8 தொழிற்சாலைகள் வர உள்ளன. இப்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள 7 தொழிற்சாலைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 24 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குப்பத்தில் மைக்ரோ வேளாண்மையை தொடங்கினேன்.
இப்போது பல விவவாயிகளின் பிள்ளைகள் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். தகவல் தொழில்நுட்பம் படித்த பலர் தொழிலதிபர்களாகவும் மாறி உள்ளனர். வெளிநாடுகளில் படித்து வேலை பார்ப்போரில் 35 சதவீதம் பேர் தெலுங்கர்களே. இப்போதே குப்பத்தில் மருத்துவம், பொறியியல், பாலிடெக்னிக், திராவிட பல்கலைக்கழகம் போன்றவை உள்ளன. இனி குப்பம் ஒரு கல்வி மையமாக செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இங்கிருந்து தரமான பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஏஐ தொழில்நுட்பம் வருங்காலத்தில் மருத்துவ ஆலோசகராகவும் மாறும். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.