புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன்படி டிசம்பர் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும். இந்த கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக, அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். மக்களுக்கு சேவையாற்றும் வகையில் குளிர்கால கூட்டத் தொடர் அமைய வேண்டும். இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
வரும் கூட்டத் தொடரில் 129, 130-வது அரசியலமைப்பு திருத்த சட்டங்கள், மக்கள் நம்பிக்கை மசோதா, திவால் சட்ட மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. பிஹாரில் அண்மையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குளிர்கால கூட்டத் தொடரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பிரதானமாக எழுப்ப திட்டமிட்டு உள்ளன. தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.