சென்னையில் உள்ள முக்கிய மான ரயில் நிலையமாக தாம்பரம் ரயில் நிலையம் உள்ளது. தாம்பரத் தில் 3-வது ரயில் முனையம் அமைக்கப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
சென்னை கடற்கரை- தாம்பரம் வரை தினசரி 220-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும், தாம்பரம் ரயில் நிலை யம் வழியாக செங்கல்பட்டு, திருமால் பூர் உள்பட புறநகர்களுக்கு 10-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக் கப்படுகின்றன. இதுதவிர, எழும்பூரில் இருந்து மத்திய, தென் மாவட்டங் களுக்கு தினசரி 30-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் தினசரி தாம்பரம் வழியாக இயக்கப்படுகின்றன.
தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், வடமாநிலங்களுக்கும் தலா 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால், இங்கு வந்து செல்லும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 2.30 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், இந்தநிலையம் 2024- 25ம் ஆண்டில் மட்டும் ரூ.276 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இருப்பினும், இந்த நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி, பாண்டியன் உள்ளிட்ட விரைவு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் 7,8-வது நடை மேடைகள் வழியாக இயக்கப்படுகின்றன. இந்த நடைமேடைகளில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கி வசதி இல்லை.
இதுதவிர, 5, 6-வது நடைமேடைகளிலும் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி வசதிகள் இல்லை. இதனால், விரைவு ரயில்களில் ஏறுவதற்காக இங்கு வரும் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, வயதானவர்கள், மாற்றுத் திறனாளி பயணிகள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுதவிர, நடைமேடைகளில் குடிநீர், கழிப்பறை என எந்த அடிப்படை வசதியும் இல்லை. 6,7,8-வது நடைமேடைக்கு செல்ல பேட்டரி கார் வசதி உள்ளது. ஆனால், இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால், ஏழை மக்கள், மாற்றுத்திறனாளி பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது.
இது குறித்து, சென்னை, சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறியதாவது: கடந்த 2024- 25 ஆண்டில் மட்டும் 3.4 கோடி பயணிகள் தாம்பரம் ரயில் நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். ஆனால், இந்த ரயில் நிலையத்தில் போதிய வசதிகள் எதுவுமே இல்லை. 5 முதல் 10 வரை உள்ள நடைமேடைகளில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கி வசதிகள் இல்லை. ஓய்வு அறை, குடிநீர் வசதி, கழிவறை வசதி, சக்கர நாற்காலி வசதி என எதுவும் போதிய அளவு இல்லை.
தாம்பரம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்வது தொடர்வாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 2020ம் ஆண்டு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. அப்போது, ரூ.1,000 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இருப்பினும், தற்போது வரை விரிவான திட்ட அறிக்கையை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பவில்லை. தாம்பரம் ரயில் நிலைத்தில் பயணிகளுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது,”தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். பார்க்கிங் வசதி நிலையத்தின் இருபுறமும் அமைத்து கொடுத்து உள்ளோம். நகரும் படிக்கட்டுகள் பொருத்தவரை தேவையான நடைமேடைகளில் படிப்படியாக ஏற்படுத்தப்படும்.மறுசீரமைப்பு பணி தொடங்கும்போது, அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்” என்றனர்.