ஐதராபாத்,
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் இமொ மாகாணத்தை சேந்தவர் ஜான்கென்னடி (வயது 43). இவர் தொழில்முறை பயணமாக கடந்த 2012ம் ஆண்டு இந்தியா வந்துள்ளார். மும்பை வந்த இவர் விசா காலம் நிறைவடைந்த பின்னும் நைஜீரியா திரும்பி செல்லாமல் மாயமானார்.
மும்பையில் இருந்து பெங்களூரு, ஐதாராபாத் போன்ற நகரங்களில் தலைமறைவாக வாழ்ந்துள்ளார். மேலும், கடந்த 13 ஆண்டுகளாக இந்தியாவில் தலைமறைவாக இருந்த ஜான் கென்னடி போதைப்பொருள் கடத்தல், விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், ஐதராபாத்தில் போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபடும் கும்பல் குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, ஐதராபாத்தின் ஆசிப் நகரில் தலைமறைவாக இருந்த நைஜீரியர் ஜான் கென்னடியை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் கடந்த 13 ஆண்டுகளாக இந்தியாவில் தலைமறைவாக வாழ்ந்து வந்தது உறுதியான நிலையில் ஜான் கென்னடியை நைஜீரியாவுக்கே அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர். விமானம் மூலம் கென்னடி நைஜீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.