வெளிநாட்டில் பதுங்கியிருந்த இந்தியாவை சேர்ந்த 2 தாதாக்கள் கைது – விரைவில் நாடு கடத்தல்

வாஷிங்டன்,

​​இந்தியாவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தாதாக்கள் நாட்டிற்கு வெளியே இருந்தபடி, குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை வேலைக்கு அமர்த்தி, தங்கள் மாபியா கும்பல்களை இயக்கி வருகின்றனர். இந்த கும்பல்களின் தலைவர்களை மடக்கிப் பிடிப்பதற்காக இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சர்வதேச அளவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், வெளிநாட்டில் பதுங்கியிருந்த இந்தியாவை சேர்ந்த வெங்கடேஷ் கார்க் மற்றும் பானு ராணா ஆகிய 2 தாதாக்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் வெங்கடேஷ் கார்க் அரியானா மாநிலம் நாராயண்கர் பகுதியை சேர்ந்தவர். இவர் மீது 10-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் அரியானா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த இளைஞர்களை வைத்து மாபியா கும்பலை நடத்தி வந்துள்ளார்.

குருகிராம் பகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த கொலைக்கு பிறகு இவர் ஜார்ஜியா நாட்டிற்கு தப்பியோடினார். அங்கிருந்தபடி தனது மாபியா வேலைகளை தொடர்ந்து செய்து வந்த வெங்கடேஷ் கார்க், இந்திய புலனாய்வுத்துறையின் தீவிர விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே போல், அமெரிக்காவில் பதுங்கியிருந்த பானு ராணா என்பவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் அரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் நீண்ட காலமாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், இவரது மாபியா கும்பல் அரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இவர் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்ற நிலையில், இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மற்றும் கண்காணிப்பு மூலம் பானு ராணாவின் இருப்பிடத்தை கண்டறிந்தனர். இதன் மூலம் பானு ராணா அதிரடியாக கைது செய்யப்பட்டார். விரைவில் வெங்கடேஷ் கார்க் ஜார்ஜியாவில் இருந்தும், பானு ராணா அமெரிக்காவில் இருந்தும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.