கோவில்பட்டி: மேற்கு ஆப்ரிக்காவில் பணியில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் உட்பட 5 இந்தியர்களை துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். இதையறிந்த அவர்களது குடும்பத்தினர், தொழிலாளர்களை மீட்க தமிழக அரசும், இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய அமைப்பினர் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருவதுடன், மாலியில் உள்ள வெளிநாட்டினரை கடத்தி பிணைக் கைதியாக வைத்து மிரட்டி வரும் போக்கும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாலியில் உள்ள கோப்ரி நகரில் மின்மயமாக்கல் திட் டத்தின் கீழ் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இந்திய தொழிலாளர்களில் 5 பேரை அங்கு சென்ற ஆயுதம் தாங்கிய பயங்கரவாத கும்பல் கடத்திச் சென்றது.
இவர்கள் 5 பேரில் 3 பேர் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்தவர்களாகும். அதாவது ஓட்டப்பிடாரம் அருகே கொடியன்குளத்தைச் சேர்ந்த புதியவன் (52), நாரைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த பொன்னுத்துரை (41), கலப்பைப்பட்டியைச் சேர்ந்த பேச்சிமுத்து என்ற முத்துசாமி (41) ஆகியோர் என்பதும், மீதமுள்ள 2 பேர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த இசக்கிராஜா (36), கடையநல்லூர் கண்மணிபுரத்தைச் சேர்ந்த தளபதி சுரேஷ் (26) என்பதும் தெரியவந்ததுள்ளது.
இவர்கள் 5 பேரையும் கடந்த 6-ம் தேதியே பயங்கரவாத கும்பல் பிணையக் கைதியாக கடத்தியது தற்போது தான் அவர்களது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. அவர்களை உடனடியாக மீட்க பிரதமர் மோடியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தலையிட்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து, கடத்தப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினரை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும், மத்திய அரசின் உதவியுடன் கடத்தப்பட்டுள்ள தொழிலாளர்களை மீட்க தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்றும், என எம்எல்ஏ தெரிவித்தார்.