சென்னை: “இப்போது அரசியலில் சில பேர் அடித்தளமே இல்லாமல் உள்ளே வர முயற்சிக்கிறார்கள். வெறும் அட்டைக்கு எந்த விதமான அஸ்திவாரமோ, கொள்கையோ கிடையாது. சும்மா தட்டினால் கீழே விழுந்துவிடும்” என்று விஜய்யின் தவெகவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார்.
திமுகவின் 75-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, கட்சியின் இளைஞர் அணி சார்பில் ‘திமுக – 75 அறிவுத் திருவிழா’ என்ற பெயரிலான மாநாடு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது: “இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள்.
புதிதாக சில பேர் கிளம்பி வரிசையாக வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு சாதாரண அரசியல் கட்சியாக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாதிரி, பத்தோடு பதினொன்றாக இருந்திருந்தால், அதை யாரும் அழிக்க வேண்டும் என்று முயற்சி செய்யமாட்டார்கள். நாம் கொள்கைக் கூட்டம் என்று தெரிந்ததால்தான் அவர்கள் நம்மை அழிக்க வருகிறார்கள். குறிப்பாக, பாசிச சக்திகள் நம் கொள்கைக் கூட்டத்தின் மீது கை வைத்துப் பார்க்க முயற்சிக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை, சென்னை ராபின்சன் பூங்காவில் தொடங்கியபோது பேரறிஞர் அண்ணா சொன்ன ஒரு விஷயத்தை இங்க நினைவுகூர விரும்புகிறேன். ‘டெல்லியின் ஆதிக்கம் ஒழிய வேண்டும், மக்களைப் பாழ்படுத்தும் பாசிசம் ஒழிய வேண்டும், பதுங்கிப் பாய நினைக்கும் பழைமை ஒழிய வேண்டும்’ என்று அறிவித்துவிட்டுத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா துவக்கி வைத்தார். அந்த முழக்கத்தை மனதில் ஏந்திதான், இன்றைக்கும் நாம் களத்தில் இறங்கிப் போராடிக்கொண்டு இருக்கிறோம்.
திமுக என்கிற விதையை திமுகவினர் தண்ணீர் ஊற்றி வளர்க்கவில்லை. வியர்வை, ரத்தம் சிந்தி, தங்கள் உயிரையே உரமாக்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்தார்கள். திமுகவினரின் தியாகத்தால்தான் நம் இயக்கம், இன்றைக்கு ஓர் ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. அதனால்தான், பெரிய பெரிய புயலால் கூட நம் இயக்கத்தை வீழ்த்த முடியவில்லை. கொள்கைதான் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அடித்தளம். அந்த அடித்தளம் பலமாக இருந்தால் தான், அதன் மேல் கட்டுகிற கோட்டை, வலுவாக இருக்கும்.
இப்போது அரசியலில் சில பேர் அடித்தளமே இல்லாமல் உள்ளே வர முயற்சிக்கிறார்கள். கண்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். அங்கே தாஜ்மஹால் மாதிரி செட் போடுவார்கள், ஈஃபிள் டவர் மாதிரி செட் போட்டிருப்பார்கள். கண்காட்சிக்குச் செல்கிறவர்கள் அந்த செட்டுக்கு முன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். அவையெல்லாம் வெறும் அட்டைதான், அதற்கு எந்த விதமான அஸ்திவாரமோ, கொள்கையோ கிடையாது. சும்மா தட்டுனா கீழே விழுந்துவிடும். அவர்களுக்கு எல்லாம் நான் சொல்லிக் கொள்வது, திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தியாகத்தாலும், போராட்டத்தாலும் உருவான இயக்கம். எமர்ஜென்சியைப் பார்த்த கட்சி, நம் திராவிட முன்னேற்றக் கழகம். எமர்ஜென்சியைப் பார்த்த தலைவர் எங்கள் திமுக தலைவர், முதலமைச்சர்.
எமர்ஜென்சி காலத்தில் மாநிலக் கட்சிகளை எல்லாம் ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். உடனே, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ன செய்தார்கள் தெரியுமா? கட்சியின் பெயரை மாற்றிக்கொண்டார்கள். ஏதோ உத்தர பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் கிளைகள் இருக்கிற மாதிரி, கட்சியின் பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று கட்சியின் பெயரை மாற்றிவிட்டார்கள். இதுதான் தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் இருக்கிற வித்தியாசம்.
நம்மை எல்லாம் கொள்கைதான் வழி நடத்துகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமியை பயம்தான் வழி நடத்துகிறது. இப்போது நாம் தி.மு.க-வின் 75-வது ஆண்டைக் கொண்டாடுகிறோம். இந்த நிகழ்ச்சிக்கு அறிவுத் திருவிழா’ என்று பெயர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் அறிவுத் திருவிழா’வெல்லாம் நடத்த முடியாது. வேண்டுமென்றால் ‘அடிமைத் திருவிழா’ என்று ஒரு நிகழ்ச்சி நடத்தலாம். அந்த அளவுக்குக் கடைந்தெடுத்த அடிமையாக இருக்கிறார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். அ.தி.மு.க-வின் ஓனர் பாசிச பா.ஜ.க-வால் நேரடியாக தமிழ்நாட்டுக்குள் கால் எடுத்து வைக்க முடியவில்லை. அதனால்தான் வேறு வேஷத்தைப் போட்டுக்கொண்டு வருகிறார்கள். அ.தி.மு.க என்கிற போர்வையை போர்த்திக்கொண்டு வருகிறார்கள். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைப் பார்க்கும்போது இரண்டு விஷயம்தான் எனக்கு ஞாபகம் வரும். ஒன்று கால், இன்னொன்று கார். ஒரு கட்சியின் தலைவர் இன்னொரு கட்சி தலைவரை பார்ப்பதற்கு யாராவது 4 கார் மாறி செல்வார்களா?
அதேபோல் கால், ஜெயலலிதா அம்மா இருந்தவரை அவரின் கால், அந்த அம்மா இறந்த பிறகு அந்த அம்மாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா அம்மாவின் கால், அந்த அம்மையார் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்றவுடன், டி.டி.வி. தினகரன் கால், அதற்கு பிறகு டெல்லிக்குச் சென்று மோடி, அமித் ஷாவின் கால்கள். இப்போது ஜெ.தீபாவின் கால். இப்போது அந்த கால்கள் பற்றவில்லை என்று, புதிய கால்களைத் தேடிக்கொண்டு இருக்கிறார். அ.தி.மு.க தொண்டர்களைப் பார்க்கும்போது நமக்கெல்லாம் பாவமாகத்தான் இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க தொண்டர்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ஒரு பிரமாண்டமான கட்சி, நம் கூட்டணிக்கு வரப்போகிறது என்று சொன்னார். அ.தி.மு.க. பிரச்சார கூட்டத்தில், இன்னொரு கட்சியின் கொடியை அவர்களே பிடித்து ஆட்டிக்கொண்டு, பார்த்தீர்களா கொடி பறக்குது. பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று குரளி வித்தை காட்டினார். தேர்வுக்கு படிக்காமல் வந்த மாணவன், விடைத்தாளில் பிள்ளையார் சுழி மட்டும் போட்டு உட்காந்து இருக்கிற மாதிரி ஆச்சு, இப்போது எடப்பாடி பழனிசாமியின் நிலைமை. படிக்காதவர்கள் ஒரேயொரு பிள்ளையார் சுழிதான் போடுவார்கள். ஒன்றும் எழுதாமல் எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான் என்று விட்டுவிடுவார்கள். அந்த நிலைமையில்தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறா.
வருகின்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்ற நிலைமை நீங்கள் உருவாக்க வேண்டும். இதை எப்படியாவது குறுக்கு வழியில் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், பாசிச பா.ஜ.க. திட்டம் போட்டு கொண்டு வந்ததுதான் எஸ்.ஐ.ஆர் (SIR) என்று சொல்கிற ஸ்பெஷல் இன்டென்ஷிவ் ரிவிஷன் (Special Intensive Revision).
பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்களை எஸ்.ஐ.ஆர் (SIR) மூலம் நீக்கினார்கள். அதே மாதிரி, இங்கேயும் சிறுபான்மை மக்களுடைய வாக்குகளை, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுடைய வாக்குகளை குறி வைத்து எப்படியாவது நீக்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். எஸ்ஐஆர் முடிகிறவரைக்கும் அந்த வேலையில நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பா.ஜ.க-வின் சதித் திட்டத்தை நம்மால் முறியடிக்க முடியும்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலமாகச் சென்று தி.மு.க மேல் வன்மத்தை பரப்பிக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு மாநிலத்துக்கு இடையேயும் பகையை மூட்டிக்கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் பிஹார் மக்களை, நாம் துன்புறுத்துகிறோம் என்று பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள ஒரேயொரு பிஹார்காரர் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்றால், அது இங்குள்ள ஆளுநர் ரவி மட்டும்தான். அவரையும் நாம் துன்புறுத்தவில்லை. அவர் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களை துன்புறுத்துவதால், அவரை தமிழ்நாட்டு மக்கள் துன்புறுத்துகிறார்கள்.
பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சியை நாம் முறியடிக்க வேண்டும். விரைவில், பாசிச பா.ஜ.க.வுக்கு எதிராக ஒட்டுமொத்த நாட்டு இந்திய மக்களும் திரளப் போகிறார்கள். அதற்கான விழிப்பு உணர்வை ஒட்டுமொத்த நாட்டுக்கும் கொடுக்கும் தத்துவம் நம்முடைய திராவிட மாடல் தத்துவம். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் நம் அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதனால்தான், ‘திராவிடம்’ என்கிற பெயரைக் கேட்டாலே பாசிச சக்திகள் இன்று பதறுகிறார்கள்.
இந்தி திணிப்புக்கு எதிராக நாம் பேசினால், வட மாநிலங்களில் இருந்து நமக்கு ஆதரவு வருகிறது. புதியக் கல்விக் கொள்கை வேண்டாம் என்று நாம் முதலில் சொன்னோம். இப்போது மற்ற மாநில முதலமைச்சர்களும் எங்களுக்கும் வேண்டாம் என்று குரல் கொடுக்கிறார்கள். மாநில உரிமைக்காக நாம் பேசினால், பிற மாநில முதலமைச்சர்களும் நம்முடன் சேர்ந்து குரல் கொடுக்கிறார்கள். நிதி உரிமை வேண்டும் என்று நாம்தான் முதன்முதலில் குரல் கொடுத்தோம். இன்றைக்கு மற்ற மாநில முதலமைச்சர்கள் நம் முதலமைச்சரைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளார்கள். வருகிற 2026 தேர்தலில் திமுகவை ஏழாவது முறையாக ஆட்சியில் அமர்த்த வேண்டும்” என்றார் உதயநிதி ஸ்டாலின்.