புதுடெல்லி: தாய்லாந்து – மியான்மர் எல்லையில் சைபர் மோசடி மையங்கள் அதிகளவில் உள்ளன. இங்கிருந்து சர்வதேச அளவில் அனைத்து விதமான சைபர் மோசடி சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் வெளிநாட்டு வேலை என கூறி தாய்லாந்து அழைத்து வரப்படுபவர்களை மியான்மர் எல்லையில் உள்ள சைபர் மோசடி மையங்களில் சீனாவை சேர்ந்த கும்பல் வலுக்கட்டாயமாக பணியமர்த்துகிறது. இந்த கும்பலிடம் சிக்கியவர்கள் எளிதில் தப்பிக்க முடியாது.
இந்நிலையில் சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தத்தையடுத்து, மியான்மர் பாதுகாப்பு படையினர் சைபர் மோசடி மையங்களில் திடீர் சோதனை நடத்தி அங்கு பணியாற்றும் வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவ்வாறு வெளியேற்றப்பட்ட 197 இந்தியர்கள், தாய்லாந்து எல்லை நகரான மா சாட்டுக்குள் நுழைந்தனர். இதனால் அவர்களை தாய்லாந்து போலீஸார் கைது செய்தனர்.
இத்தகவல் இந்திய தூதரகத்திடம் தெரிவிக்கப்பட்டதும், கைது செய்யப்பட்ட இந்தியர்களை தாயகம் அழைத்து செல்வதாக இந்தியா உறுதியளித்தது. அதன்படி இந்திய விமானப்படையின் 2 ஜம்போ விமானங்கள் தாய்லாந்தின் மா சாட் நகருக்கு அனுப்பப்பட்டன. அதில் 197 இந்தியர்களும் தாயகம் திரும்பினர்.
இதைப் பார்வையிடுவதற்காக தாய்லாந்து பிரதமர் அனுடின் சர்விராகுல் மா சாட் நகருக்கு வந்தார். அவரை தாய்லாந்துக்கான இந்திய தூதர் நாகேஸ் சிங், மா சாட் விமான நிலையத்தில் சந்தித்தார். இந்திய அரசு துரிதமாக செயல்பட்டு, மியான்மருக்கு கடத்தி வரப்பட்ட இந்தியர்களை திரும்ப அழைத்துக் கொண்டதை தாய்லாந்து பிரதமர் பாராட்டினார்.