பாலிவுட் நடிகர் கோவிந்தா சமீபகாலமாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவருக்கும் அவரது மனைவி சுனிதாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை என்று கூறி வருகின்றனர்.
நேற்று இரவு மும்பையில் உள்ள தனது வீட்டில் கோவிந்தா இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் ஒரு டாக்டருடன் மொபைல் போனில் பேசி சில மருந்துகளை கொடுத்தனர். ஆனால் நிலைமை சரியாகவில்லை. இதையடுத்து, அதிகாலை 1 மணியளவில் அவர் அவசரமாக ஜுகுவில் உள்ள கிரிடிகேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள கோவிந்தாவிற்கு, டாக்டர்கள் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். அந்த பரிசோதனைகளின் முடிவுகள் வந்த பிறகுதான் மேலும் எதையும் கூற முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளார். இதை நடிகர் கோவிந்தாவின் மேலாளர் சசி சின்ஹா உறுதிப்படுத்தியுள்ளார். அதேபோல், கோவிந்தாவின் வழக்கறிஞர் லலித் பிந்தாலும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் தர்மேந்திராவை பார்க்க கோவிந்தா சென்றிருந்தார். அவர் தனது காரை தானே ஓட்டி வந்தார். தர்மேந்திராவை சந்தித்த பிறகு, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கோவிந்தா இருந்ததாக கூறப்படுகிறது.
61 வயதாகும் கோவிந்தா, மும்பையில் தனது மனைவியுடன் சேர்ந்து இல்லாமல் தனியாக வசித்து வருகிறார். தற்போது நடிகர் சல்மான் கான் நடித்துவரும் Battle of Galwan படத்தில் கோவிந்தாவும் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.