‘துள்ளுவதோ இளமை’ படத்தில் நடித்த அபிநய் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் (நவ.12) காலமானார். அவருடன் பணியாற்றிய நடிகை விஜயலட்சுமி அகத்தியன் அபிநய் குறித்து பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விஜயலட்சுமி வெளியிட்டிருக்கும் பதிவில், “சென்னை 28 திரைப்படத்திற்குப் பிறகு நான் சாட்டிலைட் ரேடியோ விளம்பரத்தில் நடிகர் அபிநய்யுடன் இணைந்து நடித்தேன். அவர் அபிநய் விளம்பர உலகில் நம்பர்.1 இடத்தில் இருந்தார்.

அந்த விளம்பரத்தின் படப்பிடிப்பை டெல்லியில் 4 நாட்கள் நடத்தினர். இப்போது இருக்கும் விஜயலட்சுமி அல்ல அப்போது இருந்தவள். அறிமுகமில்லாதவர்களைப் பார்த்தால் பயம், தனியாகச் செல்வதில் தயக்கம், கூச்ச சுபாவம் கொண்டவள்.
டெல்லியில் நான் தங்க அப்பார்ட்மென்ட் ஒதுக்கப்பட்டது. அப்போது, திடீரென என் அறையில் தங்க இன்னொரு ஆணாக அபிநய் வந்தார். அப்போது, நான் ஃபெரோஸை (கணவர்) காதலித்துக் கொண்டிருந்தேன்.
இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு ஆணுடன் ஒரே அறையில் தனியாகத் தங்குவதை ஃபெரோஸிடம் சொல்லவில்லை. பதற்றத்துடன் அதை நான் கையாண்டேன்.

ஆனால், அபிநய் ஒரு ஜென்டில்மேன்! தொழில் ஒழுக்கம்கொண்ட நேர்த்தியான ஆள். ஒவ்வொரு ஃபிரேமிலும் தன் உழைப்பைப் போடுவார். படப்பிடிப்பு முடிந்து இரவு அப்பார்ட்மெக்ட் திரும்பும்போது நான் அறைக்குள் சென்றுவிடுவேன்.
ஆனால், அவர் லிவிங் ரூமில் தனியாக அமர்ந்துகொண்டு குடித்துக்கொண்டிருப்பார். அவர் அங்குதான் இருக்கிறாரா? என கதவைத் திறந்து பார்க்கும்போதெல்லாம் அங்கேயே அமைதியாக மதுவை அருந்தி, ஒரு முழு பாட்டிலையும் முடித்து, தன்னை மறந்து கிடப்பார்.
ஒரு இளம் நடிகர் இப்படித் தனியாக குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மனம் மிகவும் கனமாக இருக்கும். அப்படியொரு நாள் இரவில், அவர் குடித்துக் கொண்டிருந்தபோது நான் அவரைப் பார்த்ததும், நீ ‘குடிக்கிறாயா?’ எனக் கேட்டார். ‘பழக்கம் இல்லை’ என்றதும் ஜூஸ் குடி என்றார். அதற்குள் என்ன இருக்குமோ என்கிற எண்ணத்தில் வேண்டாம் என மறுத்துவிட்டு, கேட்கவே கூடாது என நினைத்த கேள்வியைக் கேட்டேன்.

”ஏன் இப்படி குடிக்கிறீங்க…? நீங்க நன்றாக உழைக்கும் இளம் வெற்றியாளர். ஏன் இந்தப் பழக்கம்?” என்றேன்.
அபிநய் தன் தனிப்பட்ட வாழ்க்கை, கடமைகள், தன் அம்மா, அழுத்தங்கள், வலிகள், தனிமை குறித்து 2 மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினார்.
அவர் இதயத்திலிருந்து எல்லாம் வெளியேறட்டும் என நான் எதுவும் சொல்லாமல் கவனமாக முழுமையாகக் கேட்டேன்.
படப்பிடிப்பு முடிந்து விமான நிலையத்திலிருந்து விடைபெறும்போது, அபிநய் என்னிடம், “நன்றி விஜி. இதற்கு முன் யாரும் என் வலிகளைக் குறித்து இவ்வளவு கேட்டதில்லை.
கடவுள் இப்படியும் சில பெண்களைப் படைக்கிறாரா? ஒருவேளை, உனக்கு இரட்டை (ட்வின்) சகோதரி இருந்தால் எனக்கு தெரியப்படுத்து” என்றார். நான் வெடித்துச் சிரித்து, அவரைக் கட்டியணைத்து வழியனுப்பினேன். அதுவே, நாங்கள் சந்தித்துக்கொண்ட கடைசி சந்திப்பு.

அதன்பின், இப்போது இறந்துவிட்டார் எனக் கேள்விப்படுகிறேன். எனக்கு அழுகை வருகிறது. ஆனால், இது வருத்ததிற்கு அல்ல… மகிழ்ச்சியாக அவருடைய போராட்டம் முடிவிற்கு வந்ததை நினைத்து.. இறுதியாக தன் அமைதியைக் கண்டடைந்துவிட்டார்.
நான், “அமைதியாக இளைப்பாருங்கள்” (rest in peace) எனச் சொல்ல மாட்டேன். ”சந்தோஷமாகக் கொண்டாடு, மச்சி” (party big, buddy) என்றுதான் சொல்வேன். ஏனென்றால், இம்முறை தன் வலிகளை நினைத்து அவர் குடிக்க மாட்டார். தன் விடுதலையை ருசித்துக் குடிப்பார்” என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.