புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த, அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்டச் செயலாளருமான சி.விஜயபாஸ்கர்,
“ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்குப் பிறகும் வாக்காளர் சீர்திருத்தப் பணி என்பது நடைபெறக்கூடிய வழக்கமான பணி. இரட்டை வாக்குப்பதிவு நீக்கப்பட வேண்டும், இறந்தவர்களை நீக்க வேண்டும், புதிய வாக்காளர்களைச் சேர்க்கவேண்டும். இதற்கெல்லாம் சீர்திருத்தம் செய்யவேண்டும். தேர்தல் ஆணையத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தப் பணியை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, சீர்திருத்தப் பணியை வெளிப்படையாக, நேர்மையாக செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

எத்தனை முனைப் போட்டி வந்தாலும் எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க வரும் 2026 – ம் வருட சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக அமையும். அ.தி.மு.க-வில் வாரிசு அரசியல் குறித்த கேள்வி கேட்கிறீர்கள். அ.தி.மு.க ஜனநாயகக் கட்சி. மக்கள் விரும்புகின்ற கட்சி. மக்களை விரும்புகின்ற கட்சி. அப்படிப்பட்ட அ.தி.மு.க கட்சி எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதா, ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி, எடப்பாடியாருக்குப் பிறகு இன்னொரு யாரோ வருவார் என எடப்பாடியார் சொல்லியிருக்கிறார். ஆலமரமாக இருக்கக்கூடிய அ.தி.மு.க-வில் பல நேரத்தில் பல குருவிகள் வந்து, அடைகாத்து குஞ்சு பொரித்து வெளியேறி இருக்கின்றன. அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை” என்றார்.