சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத்தகடுகளில் இருந்து தங்கம் அபகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு தங்கத்தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போற்றி, தங்கத்தகடுகளை செம்புத்தகடுகள் என்று சான்றிதழ் வழங்கிய தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, அந்த சான்றிதழில் கையெழுத்து போட்டிருந்த கோவில் செயல் அதிகாரியாக இருந்த சுதீஷ் குமார், அப்போது கோவில் திருவாபரண கமிஷனராக இருந்த எஸ்.பைஜு ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்தன.
இந்தநிலையில் சபரிமலையில் தங்கம் அபகரிப்பு நடந்த காலகட்டத்தில் தேவஸ்தான தலைவராகவும், 2 முறை கமிஷனராகவும் இருந்த என்.வாசுவை சிறப்பு புலனாய்வுக்குழுவினர் நேற்று கைது செய்தனர். அதாவது துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவு நிலைகளில் தங்க முலாம் பூசிய பிறகு மீதம் உள்ள தங்கத்தை ஏழை பெண்களின் திருமணத்திற்கு பயன்படுத்த விரும்புவதாக உண்ணிகிருஷ்ணன் போற்றி, வாசுவிற்கு இ-மெயில் அனுப்பி இருந்தார்.
அந்த இ-மெயில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந் தேதி தனக்கு கிடைத்ததாக வாசு உறுதி செய்துள்ளார். இதனால் தங்கம் அபகரிப்பு நடந்த விஷயம் வாசுவுக்கும் தெரியும் என்பதால் அவரை தற்போது கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதைதொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.