ஐபிஎல் வரலாற்றின் 10 துரோக சம்பவங்கள்: ரெய்னாவை கழட்டிவிட்டது முதல் ரோஹித் நீக்கம் வரை!

Shocking Top 10 Betrayal Incidents In IPL History: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட இருப்பதாக வெளியாகி உள்ள தகவல், சிஎஸ்கே ரசிகர்களை பெரும் அதிர்ச்சக்குள்ளாக்கியது மட்டுமின்றி அந்த அணியின் மீது பெரியளவில் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Add Zee News as a Preferred Source

குறிப்பாக, 2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சிஎஸ்கேவுக்கு கோப்பையை வென்று கொடுத்து, தோனி தூக்கிக் கொண்டாடிய ஜடேஜாவை எப்படி சிஎஸ்கே வெளியே அனுப்புகிறது என உணர்ச்சிவயப்பட்டு தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அணியின் காம்பினேஷன் சீராகும், சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்கு வருகிறார், ஜடேஜா சரியாக விளையாடவில்லை என ஆயிரம் காரணங்களை சொன்னாலும் சிஎஸ்கே ரசிகர்களின் மனம் திருப்தியடையவில்லை. ஜடேஜா மீண்டும் சிஎஸ்கேவுக்கே விளையாட மாட்டாரா என இன்னும் வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். 

டாப் 10 துரோக சம்பவங்கள்

சிஎஸ்கே ரசிகர்களை மட்டும் சொல்லவில்லை, ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களுக்கும் இது பொருந்தும். ஐபிஎல் என்பது கடந்த 18 ஆண்டுகளில் இந்தியாவின் மேல் பெரிய தாக்கத்தை செலுத்தியிருக்கிறது. ஓராண்டில் 10 மாதங்கள் கிரிக்கெட் பார்க்காதவர்கள் கூட அந்த 2 மாதங்களில் ஐபிஎல் போட்டிகளை பார்ப்பார்கள். இந்தச் சுழலில், ஐபிஎல் ரசிகர்களை பெரியளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய சம்பவங்களை இங்கு நினைவுக்கூரலாம். 

1. வார்னர் – SRH பிரச்னை

2016ஆம் ஆண்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பையை வெல்ல அப்போது கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் முக்கிய காரணமாக இருந்தார். அந்த அணிக்காக ஒவ்வொரு ஆண்டும் ரன்களை குவித்தார். ஆனால் கருத்து முரண்பாடு காரணமாக அவரை 2022 மெகா ஏலத்திற்கு விடுவித்தது. 2021இல் அவரிடம் இறுந்து கேப்டன்ஸியை பறித்து கேன் வில்லியம்சனிடம் கொடுத்தது மட்டுமின்றி, அவரை வீரர்களுக்கு வாட்டர் பாட்டில் கொண்டுச்செல்லும்படி கட்டாயப்படுத்தியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. வார்னக் ஹைதராபாத் அணி சமூக வலைதளப்பக்கங்களில் பிளாக் செய்யப்பட்டிருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்னால் அவரே தெரிவித்திருந்தார். 2014 சீசனில் இருந்து 10 ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் உடன் பயணித்த புவனேஷ்வர் குமார் கடந்தாண்டு கழட்டிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

2. கிறிஸ் கெயிலுக்கு ஆர்சிபி செய்த சம்பவம் 

ஆர்சிபி அணியில் 2011ஆம் ஆண்டு சீசனின் பாதியில் மாற்று வீரராக களமிறக்கப்பட்டதில் இருந்து கிறிஸ் கெயில் பல சாதனைகளை படைத்துள்ளார். அந்த அணிக்கு அதிரடியாக ஓபனிங்கில் ரன்களையும் அடித்துக் கொடுத்திருக்கிறார். அப்படியிருக்க அவர் பார்ம்-அவுட்டான உடன் 2018 மெகா ஏலத்தில் அவரை ஆர்சிபி விடுவித்தது. அதேபோல், ஆர்சிபி அணிக்காக பல முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சாளராக வலம் வந்த யுஸ்வேந்திர சஹாலை ஆர்சிபி 2022 மெகா ஏலத்திற்கு விடுவித்தது. அதேபோல், முகமது சிராஜை 2023 இல் ஆர்சிபி விடுவித்தது. இவை ஆர்சிபி ரசிகர்களுக்கு கசப்பான மருந்தாக இருந்தது.

Chris Gayle

3. சேவாக்கை நீக்கிய டெல்லி அணி 

2008ஆம் ஆண்டில் இருந்து 2012ஆம் ஆண்டு வரை பெரும்பாலான போட்டிகளில் டெல்லி அணியின் கேப்டனாக திகழ்ந்தவர் சேவாக். ஆனால் இவரை 2013 மெகா ஏலத்தை முன்னிட்டு டெல்லி அணி விடுவித்து. அவருக்கு பட்ஜெட் ஒதுக்க இயலாது என்பதாலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் பொருட்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது சேவாக் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. 

4. ஷ்ரேயாஸ் ஐயருக்கு நடந்த 2 சங்கடங்கள்

ஷ்ரேயாஸ் ஐயர் முதன்முறையாக டெல்லி அணியை 2018 சீசனில் பாதியில் இருந்து கேப்டனாக செயல்பட்டார். 2019இல் 5வது இடம், 2020இல் 2வது இடம் என இவர் தலைமையில் டெல்லி அணி இறுதிப்போட்டி வரை சென்றது. டெல்லி அணி இறுதிப்போட்டி வரை வந்தது அதுதான் முதலும், கடைசியும் ஆகும். ஆனால், 2021ஆம் ஆண்டிலேயே கேப்டன்ஸியை ரிஷப் பண்டிடம் கொடுத்த டெல்லி அணி, 2022 மெகா ஏலத்தில் ஷ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது.

தொடர்ந்து, 2022இல் கேகேஆர் அணியின் கேப்டன்ஸியை பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர், 2023இல் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. 2024இல் மீண்டும் கேகேஆர் அணியின் கேப்டனாகி கோப்பையை வென்றுகொடுத்தார். கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்று கூட பார்க்காமல் அவரை 2025 மெகா ஏலத்தில் விடுவித்தது, கேகேஆர். இது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. 

5. ரிஷப் பண்டை கழட்டிவிட்ட டெல்லி

ரிஷப் பண்டை நாட்டிற்கு பெரியளவில் அடையாளம் காட்டியது டெல்லி அணிதான். அவர் 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் கலக்கியிருந்தாலும் அவரது பேட்டிங் ஸ்டைல் ரசிகர்களை கவர்ந்தது டெல்லி அணியின் மூலம்தான். அப்படியிருக்க 2021இல் கேப்டன்ஸியை பெற்ற ரிஷப் பண்ட், 2025 மெகா ஏலத்தில் டெல்லி அணியால் விடுவிக்கப்பட்டார். அவருக்கும் அணிக்கும் இடையே கருத்து முரண் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரை விடுவித்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும, கடந்த 2025 மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டவர் ரிஷப் பண்ட் தான். அவருக்கு ரூ.27 கோடியை கொட்டியது லக்னோ அணி.

6. கேஎல் ராகுலுக்கு நடந்த சம்பவம்

இந்திய அணியின் மிக கூலான வீரராக தற்போது அறியப்படுபவர் கேஎல் ராகுல். அவரை கோபப்படுத்திய அணி என்றால் லக்னோ அணிதான். 2022, 2023 சீசன்களில் கேஎல் ராகுல் தலைமையில் லக்னோ அணி பிளே ஆப் தொடருக்கு அடுத்தடுத்து முன்னேறினாலும், 2024 சீசனில் பெரியளவில் செயல்படவில்லை. அப்படியிருக்க ஒரு போட்டியில் லக்னோ தோல்வியடைந்த பின்னர், அணியின் உரிமையாளர் சஞ்சிவ் கோயங்கா, கேஎல் ராகுல் உடன் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, 2025 மெகா ஏலத்தில் லக்னோ அவரை விடுவித்தது. 

7. சுப்மான் கில்லை கழட்டிவிட்ட கேகேஆர்

சுப்மான் கில்தான் தங்களின் எதிர்கால கேப்டன் என பேசி வந்த கேகேஆர் அணி, அவரை 2022 மெகா ஏலத்தில் அதிரடியாக விடுவித்தது பெரியளவில் விமர்சனத்திற்கு உள்ளானது. ஓபனிங் வீரரான அவரை கேகேஆர் அணி மிடில் ஆர்டரில் விளையாட வைத்தது. அவரால் அதில் சோபிக்க இயலவில்லை. அவரை ரிலீஸ் செய்த பின் குஜராத் டைட்டன்ஸ் அவரை கொத்தித் தூக்கியது. தற்போது பேட்டிங்கில் கலக்கி வருகிறார். 2023 சீசனில் அவர் 890 ரன்களை குவித்தது அசத்தினார். 2024, 2025 சீசனில் குஜராத் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். தற்போது இந்திய அணியின் ஆல்-பார்மட் வீரராகவும், டெஸ்ட் மற்றும் ஓடிஐ அணி கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shubman Gill

8. பட்லருக்கு நேர்ந்த கதி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2022 சீசனில் இருந்து சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் ஜாஸ் பட்லரை கழட்டிவிட்டது. சஹால், அஸ்வின், போல்ட் ஆகியோரை விடுவித்தாலும் பட்லர் அந்த அணி காம்பினேஷனுக்கு சரியான வீரராக இருந்தார். பட்லரை விடுவித்ததே தற்போது சஞ்சு சாம்சன் அந்த அணியை விட்டு பிரிவதற்கு அடிதளமாக அமைந்தது என்றும் கூறப்படுகிறது.

9. ரோஹித் சர்மா பஞ்சாயத்து

2022இல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து கோப்பையை வென்று கொடுத்தார், ஹர்திக் பாண்டியா. 2023 சீசனில் இறுதிப்போட்டி வரை அவர் அழைத்து வந்தார். மறுபக்கம், மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா தலைமையில் 2022இல் 10வது இடத்திலும், 2023இல் 3வது இடத்திலும் நிறைவு செய்தது. 2020ஆம் ஆண்டுக்கு பின் மூன்றாண்டுகளாகியும் கோப்பையை வெல்லவில்லை என்ற காரணத்திற்காக, புதிய கேப்டனை தேடியது மும்பை இந்தியன்ஸ். அதற்காக, 2022 மெகா ஏலத்தில் தான் கழட்டிவிட்ட ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸிடம் இருந்து டிரேட் செய்து பெற்றது, மும்பை இந்தியன்ஸ். 

2022இல் ஹர்திக் பாண்டியாவை விடுவித்ததும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கினாலும், அடுத்து ஹர்திக் பாண்டியாவை டிரேட் மூலம் எடுத்து வந்து ரோஹித் சர்மாவிடம் இருந்த கேப்டன்ஸியை அவரிடம் ஒப்படைத்தது இன்னும் அதிர்ச்சியை உண்டாக்கியது. 2024 ஐபிஎல் சீசனில் ஹர்திக் தலைமையில் மும்பை 10வது இடத்தில் முடித்தது, கடந்த 2025 சீசனில் 3வது இடத்தில் முடித்தது. ரோஹித் சர்மா இம்பாக்ட் வீரராக மட்டும் களமிறக்கப்பட்டார். ரோஹித் சர்மாவிடம் இருந்து கேப்டன்ஸி பறிக்கப்பட்டது பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகியோருக்கு கேப்டன்ஸி கொடுக்கப்படாமல் ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுக்கப்பட்டதும் கேள்விக்குள்ளானது. ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்து இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றது நினைவுக்கூரத்தக்கது.

10. சுரேஷ் ரெய்னாவை தக்கவைக்காத சிஎஸ்கே

சிஎஸ்கேவின் ‘சின்ன தல’ என அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படாமல் Unsold ஆக போனது பலருக்கும் வருத்தத்தை கொடுத்திருக்கும். ஆனால், அதைவிட பெரிய வருத்தம் என்னவென்றால் 2022இல் சிஎஸ்கே அவரை தக்கவைக்காததும், ஏலத்தில் சீண்டாததுமே ஆகும். சிஎஸ்கேவுக்கு 2008ஆம் ஆண்டில் இருந்து நம்பர் 3 இடத்தில் நிலையான வீரராக இருந்திருக்கிறார், ரெய்னா. எண்ணிக்கையில் சொல்ல முடியாத அளவிற்கு அவர் பல போட்டிகளில் சிஎஸ்கேவுக்கு வெற்றியை தேடி தந்திருக்கிறார். 

2016, 2017இல் சிஎஸ்கே தடை செய்யப்பட்டபோது மட்டுமே அவர் குஜராத் லயன்ஸ் அணிக்கு சென்றார். அங்கு கேப்டனாக செயல்பட்டாலும் அடுத்து உடனே 2018இல் சிஎஸ்கேவுக்கு திரும்பி தோனியின் கீழ் செயல்பட்டார். 2020 சீசனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிஎஸ்கே நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்னையே அனைத்திற்கும் தொடக்க புள்ளி. 2021இல் சிஎஸ்கேவுக்கு திரும்பினாலும் அவர் பழைய ரெய்னாவாக இல்லை. 2021இல் கோப்பையை வென்ற நிலையில், அடுத்த வருஷமே சிஎஸ்கேவை அவரை கழட்டிவிட்டது. அது இன்னும் ஆறாத ரணமாகவே சிஎஸ்கே ரசிகர்களுக்கு இருந்து வருகிறது.

மேலும் படிக்க | CSK ஜடேஜாவை கட்டாயப்படுத்த முடியுமா? ஐபிஎல் டிரேடிட் ரூல்ஸ் சொல்வது என்ன?

மேலும் படிக்க | சஞ்சு சாம்சன் சிஎஸ்கே வருவதில் திடீர் சிக்கல்? ஜடேஜா நீடிக்க வாய்ப்பு!

மேலும் படிக்க | சஞ்சு சாம்சன் மட்டும் இல்லை! இந்த 2 வீரர்களை டார்கெட் செய்யும் சிஎஸ்கே!

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.