ரியாத்,
போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) தற்போது அல் நாசர் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். கால்பந்து வரலாற்றில் 950க்கும் அதிகமான கோல்களை அடித்து ரொனால்டோ சாதனை படைத்துள்ளார். போர்ச்சுகல் அணிக்காக 223 போட்டிகளில் விளையாடி 141 கோல்களுடன் சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்த வீரராக ரொனால்டோ உள்ளார்.
இந்த நிலையில் 2026 உலகக் கோப்பைக்குப் பின் ஓய்வு பெறப்போவதாக ரொனால்டோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்த தருணத்தில் நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். நான் கோல்களை அடிப்பேன், இன்னும் வேகமாகவும் கூர்மையாகவும் உணர்கிறேன். தேசிய அணியில் எனது ஆட்டத்தை நான் ரசிக்கிறேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன். 2026ம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பின் ஓய்வு பெறுவேன், என்றார்.ரொனால்டோவின் இந்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அமெரிக்கா மெக்சிகோ கனடா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது