புதுடெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அல் ஃபலா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் உள்துறை அமைச்சகத்தால் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விசாரணையை துரிதப்படுத்த சிறப்பு விசாரணைக் குழுவை என்ஐஏ இன்று நியமித்துள்ளது.
குண்டுவெடிப்பை நிகழ்ந்திய உமர் முகமது நபி, டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர். இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய மற்றொரு மருத்துவரான முஜாம்மில் ஷகில் என்பவரும் இதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் மீது புலனாய்வு அமைப்புகளின் பார்வை திரும்பி இருக்கிறது. மேலும், அல் ஃபலா பல்கலைக்கழகம் தொடர்பாக மின்னணு ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கும் தங்கள் பல்கலைக்கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அல் ஃபலா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அந்த பல்கலைக்கழகம், “நடந்த துரதிருஷ்டவசமான நிகழ்வுகளால் நாங்கள் மிகவும் வருத்தமும் வேதனையும் அடைகிறோம். இதை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த துயரமான நிகழ்வால் பாதிக்கப்பட்ட அனைத்து அப்பாவி பொதுமக்களுடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.
எங்கள் நிறுவனத்தின் இரண்டு மருத்துவர்கள் புலனாய்வு அமைப்புகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகிறோம். அவர்கள் எங்கள் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்கள் என்பதைத் தவிர பல்கலைக்கழகத்துக்கும் அவர்களுக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
பல்கலைக்கழகத்தின் நற்பெயரை கெடுக்கும் நோக்கில் சில ஆன்லைன் தளங்கள் அடிப்படையற்ற தவறான செய்திகளை பரப்புகின்றன. இதுபோன்ற அனைத்து தவறான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுக்களையும் நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், எங்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுக்கிறோம்.
சில தளங்களில் கூறப்படுவதுபோல பல்கலைக்கழக வளாகத்திற்குள் எந்த ஒரு ரசாயனமோ அல்லது பொருளோ பயன்படுத்தப்படவில்லை, சேமிக்கப்படவில்லை, கையாளப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். பல்கலைக்கழக ஆய்வகங்கள் எம்பிபிஎஸ் மாணவர்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளின் கல்வி மற்றும் பயிற்சி தேவைகளுக்காக மட்டுமே சில ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு பொறுப்பான நிறுவனமாக நாங்கள் நாட்டின் ஒற்றுமை, அமைதி, பாதுகாப்புக்கான எங்கள் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம். தேசிய பாதுகாப்பு தொடர்பாக நியாயமான, உறுதியான முடிவை எட்டுவதற்கு சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு பல்கலைக்கழகம் தனது முழு ஒத்துழைப்பை வழங்குகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.