மும்பை,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சீசனில் ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை ரூ.23¾ கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அவரை போன்ற வீரருக்கு இவ்வளவு தொகை என்பது ரொம்பவே அதிகம். மிடில் ஆர்டரில் அவர் வெவ்வேறு வரிசையில் இறக்கப்படுகிறார். அத்துடன் பந்து வீச்சில் அவரை பயன்படுத்துவதில்லை.
2021-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் கொல்கத்தா அணிக்காக அதிக ரன்கள் குவித்தவராக இருந்தார். 2024-ம் ஆண்டு தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்வதற்கு உதவிகரமாக இருந்தார். ஆனால் இந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் (11 ஆட்டத்தில் 142 ரன்கள் எடுத்தார்) அவரது சீரற்ற பேட்டிங் வரிசை மற்றும் மெகா தொகைக்கு ஏலம் போனதால் விழுந்த முத்திரை அவருக்கு சரியாக பொருந்தவில்லை. எனவே அவரை அணியில் இருந்து விடுவிப்பது குறித்து கொல்கத்தா அணி பரிசீலிக்க வேண்டும். இதனால் அணியின் இருப்புத் தொகையும் அதிகமாகும். இப்போது அவரை விடுவித்து விட்டு ஏலத்தில் ஓரளவு நல்ல தொகைக்கு அவரை மீண்டும் எடுத்துக் கொள்ளலாம்’ என்றார்.