பெங்களூரு: தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்பட்ட தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் உரிய அனுமதி, பாதுகாப்புச் சான்றிதழ் இல்லாதவையாக இருப்பதாகக் கூறி, அம்மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் 60 பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்’ விதிகளின்படி சாலை வரி விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவித்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவில் உள்ள பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டிய ஆம்னி பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டன. தூக்க கலக்கத்தில் இருந்த பயணிகளை வேறு வாகனங்களில் கர்நாடகாவுக்குச் செல்லுமாறு இறக்கிவிட்டனர்.
இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் காலையிலேயே சுமார் 1 கி.மீ. தூரம் சுமைகளோடு நடந்து சென்று, பெங்களூரு பேருந்துகளில் ஏறி சென்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில ஆட்டோ, வாடகை கார் ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்ததால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.