புதுடெல்லி: உ.பி. லக்னோவைச் சேர்ந்த டாக்டர் ஷாகின், கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் வித்தியார்த்தி மருத்துவக் கல்லூரியில் (ஜிஎஸ்விஎம்சி) 7 ஆண்டு விரிவுரையாளராகப் பணியாற்றி உள்ளார். கடந்த 2013-ம் ஆண்டில் அவர் நிர்வாகத்துக்கு எந்த தகவலும் கூறாமல் காணாமல் போய் உள்ளார். இதையடுத்து 2021-ல் ஷாகின் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கான்பூரின் பிரபல ஜிஎஸ்விஎம்சி.யின் தகவல்களின்படி, டாக்டர் ஷாகின் ஜனவரி 1999-ல் பிரயாக்ராஜ் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம், டிசம்பர் 2003-ல் மருந்தியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் யுபிஎஸ்சி மூலம் அரசு மருத்துவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகஸ்ட் 2006-ல், அவர் ஜிஎஸ்விஎம்சி மருந்தியல் துறையில் விரிவுரையாளராக சேர்ந்தார். 2009-10-ம் ஆண்டில், ஷாதின் கன்னோஜ் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.
எனினும், 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஜிஎஸ்விஎம்சி கல்லூரிக்கே திரும்பினார். பணி நீக்கத்துக்கு பிறகு, கல்லூரியில் அனுபவச் சான்றிதழ் கோரி சகோதரரின் லக்னோ முகவரியில் இருந்து ஷாகின் விண்ணப்பித்துள்ளார். இதற்கிடையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த கண் மருத்துவர் டாக்டர் ஹயாத் ஜாபர் என்பவரை திருமணம் செய்த அவர், 2013-ல் விவாகரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ஜாபர் ஹயாத் கூறும்போது, ‘‘பெரியோர்களாகப் பார்த்து செய்து வைத்த எங்களது திருமணம் 2013-ல் முறிந்தது. அப்போது முதல் நான் ஷாகினின் தொடர்பில் இல்லை. அவர் எனது விருப்பத்துக்கு மாறாக, இருவரும் ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றலாம் என விரும்பியதால் விவாகரத்தானது. அவர் கைவிட்ட 2 குழந்தைகளும் என்னுடன் வளர்கின்றனர்’’ என்றார்.
விவாகரத்துக்கு பின் பரிதாபாத்தில் டாக்டர் ஷாகின், சில ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். அப்போதுதான் அவர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பிடம் சிக்கியுள்ளார். அவர் ஜெய்ஷின் பெண்கள் பிரிவான ‘ஜமாத் உல் மோமினாத்’தின் இந்திய தலைவராகி உள்ளார். இதனால், பரிதாபாத் பணியில் ஷாகினுடன் அப்போது தொடர்பில் இருந்தவர்களையும் டெல்லி புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன.
உ.பி.யின் சஹாரன்பூரில் பணிபுரிந்த டாக்டர் ஆதில் கடந்த நவம்பர் 6-ம் தேதி ஜம்மு காஷ்மீர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஆதில் அளித்த தகவல்களின் அடிப்படையில் டாக்டர் ஷாகின் கைதாகி இருந்தார்.
சஹாரன்பூரில் டாக்டர் ஷாகின் சகோதரர் டாக்டர் பர்வேஸ் அன்சாரியும் ஒரு மருத்துவமனை நடத்தி உள்ளார். பிறகு லக்னோவின் தனியார் பல்கலைக்கழகத்தில் பணி செய்து வந்துள்ளார். பர்வேஸும் தீவிரவாத மருத்துவர்கள் குழுவின் உறுப்பினராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவரிடம் உ.பி. தீவிரவாதத் தடுப்பு படையினர் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.