சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 1998 முதல் 2002 வரை நடத்திய தேர்வுகளில் 53 அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 2 பேர் பணிக்கு சேரவில்லை என்பதால் அந்த இடத்தில் தங்களை நியமிக்கக் கோரி மானுவேல் அரசு மற்றும் ராஜன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இருவரையும் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக நியமிக்க உத்தரவிட்டது. அதன்படி இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், தங்களை தொகுப்பூதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்ததை எதிர்த்து இருவரும் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்குமாறு கடந்த 2024-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி இருவரும் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி இளந்திரையன், தமிழக உள்துறை செயலரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி தீரஜ்குமார் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்துறைச் செயலர் தீரஜ்குமார் ஆஜரானார். இதையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணையை டிச.10-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.