இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானுக்கும், ராணுவ புரட்சிக்கும் எப்போதும் தொடர்பு உண்டு. அயூப்கான் முதல் முஷரப் வரை, பாகிஸ்தான் உருவானது முதல் இன்று வரை பல ராணுவ சர்வாதிகாரிகளை அந்த நாடு பார்த்து இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ராணுவத்தின் கட்டுப்பாட்டை மீறி செல்லும்போது இரவோடு இரவாக அரசை கவிழ்த்து ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் நாட்டை கொண்டு வந்து விடுவர்.
ஆனால் முதல் முறையாக ஆயுதம் இன்றியே, ஏன்..? ராணுவத்தை கூட பயன்படுத்தாமலே, நாட்டின் அனைத்து துறையின் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார், தற்போதைய ராணுவ தளபதி அசிம் முனிர். அதுவும் நாடாளுமன்றம் மூலமே அதனை நிறைவேற்றி இருக்கிறார். அதாவது ராணுவத்துக்கு உச்சபட்ச அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனத்தின் 27-வது சட்டதிருத்தத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி கச்சிதமாக முடித்து உள்ளார்.
அதன்படி முப்படைகள், நீதித்துறை, அணு ஆயுதம் என அனைத்து துறைகளின் அதிகாரமும் இனி அசிம் முனிரிடம் இருக்கும். பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரம் பறிக்கப்பட்டு, இனி சிவில் மற்றும் குற்ற வழக்குகள் மட்டுமே விசாரிக்கும். மாறாக அசிம் முனிரின் கட்டுப்பாட்டில் பெடரல் அரசியல்சாசன கோர்ட்டு உருவாக்கப்படும்.
பீல்டு மார்ஷல் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு உள்ள அசிம் முனிருக்காக முப்படைகளின் தலைமை தளபதி என்ற பதவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. நாட்டின் ஜனநாயக நிறுவனங்கள் அனைத் தும் அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அதிபர் மற்றும் பிரதமர் பதவிகள் வெறும் அலங்கார பதவிகளாகவே மாறியுள்ளன. இது அரசியல் மாற்றத்துக்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.