பிஜாப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கந்துல்நர் மற்றும் இந்திராவதி தேசிய பூங்காவையொட்டிய தொலைதூர கிராமமான கச்சல் ராம் வனப் பகுதிகளில் நவம்பர் 11ம் தேதி தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது, நகச்சலைட் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதில், நக்சலைட் இயக்கத்தின் மூத்த தலைவரான பாப்பா ராவின் மனைவி ஊர்மிளா மற்றும் புச்சன்னா குடியம் ஆகியோரும் அடக்கம். தற்போது சுட்டுக்கொல்லப்பட்ட இந்த நக்சலைட்களின் தலைக்கு ரூ.27 லட்சம் வரை சத்தீஸ்கர் அரசு விலை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பத்தாண்டுக்கும் மேலாக பாதுகாப்பு படையினர், பொதுமக்கள், மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றை குறி வைத்து நக்சலைட்கள் நடத்திய பல்வேறு தாக்குதல்களுக்கு பின்னால் புச்சன்னா என்ற கண்ணா (35) மூளையாக செயல்பட்டுள்ளார்.
மேலும், மாவோயிஸ்டுகளின் பிஎல்ஜிஏ (மக்கள் விடுதலை கொரில்லா ராணுவம்) பட்டாலியனுக்கு தளவாடப் பொருட்களை வழங்குவதில் ஊர்மிளா முக்கிய நபராக செயல்பட்டுள்ளார். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.